பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தக ரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது.
இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் நாளை (ஏப்ரல் 5) வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. 23 மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் மக்களவை தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
This is to confirm, our film 'PM Narendra Modi' is not releasing on 5th April. Will update soon.
— Sandip Ssingh (@sandip_Ssingh) April 4, 2019
எனவே இந்த திரைப்படத்தினை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்தன.
இதனையடுத்து ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினர். அதில் “தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதே கோரிக்கையை முன்வைத்து டெல்லி, மும்பை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகின. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மும்பை உயர்நீதிமன்றம் தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு படத்தை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மும்பையில் உள்ள சினிமா தணிக்கை குழுவினருக்குதான் உண்டு. இதில் நாங்கள் தலையிடுவதற்கு எதுவுமில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு ‘பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படம் நாளை வெளியாகாது எனவும், படத்தின் வெளியீடு குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.