Actor Vijay: மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு (Lok Sabha Election 2024 Phase 1) இன்று நடைபெற்று வரும் சூழலில், நடிகர் விஜய் இன்று வாக்களித்தார். அப்போது அவரது இடது கையில் பிளாஸ்திரி இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முழு தகவல்களையும் இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
தலைவர்கள், திரை பிரபலங்கள், வேட்பாளர்கள், மக்கள் என ஆர்வமுடன் காலையில் இருந்து பலரும் வாக்குச் செலுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் 21 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 102 தொகுதிகளில் இன்று முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிவரை நடைபெறும்.
இதில் தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கூடவே, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, சாமானிய மக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோர் காலை முதலே வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில், மதியம் 12.20 மணியளவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த விஜய் இம்முறை காரில் வந்தார். வெள்ளை சட்டை அணிந்து வந்த அவர் வாக்களித்துவிட்டு அந்த காரிலேயே வீடு திரும்பினார். விஜய்யின் வருகையால் அந்த வாக்குச்சாவடியில் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அந்த வாக்குச்சாவடி பரபரப்புடன் காணப்பட்டது.
தொடர்ந்து, வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய், இன்று சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் வாக்களிக்க வந்தபோது, அவரின் இடது கையில் பேண்டேஜ் போடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய்க்கு காயம் ஏற்பட்டதா என ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய விஜய், இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும், இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்பதையும் தெரிவித்த அவர், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மதியம் 1 மணிவரை 40.05% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தர்மபுரியில் அதிகபட்சமாக 44.08% வாக்குப்பதிவாகியுள்ளது.