தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு எத்தனை கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு? - முழு தகவல்

Railway Budget 2025: 2025-26 பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டை விட இந்தாண்டு தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு (Tamilnadu Railway Projects) ரூ.300 கோடி அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், 2009-2014 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை விட தற்போது 7.5% அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Railway Minister Ashwini Vaishnav) தெரிவித்துள்ளார். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

 
1 /8

2025-26ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் (Union Budget 2025) கடந்த பிப். 1ஆம் தேதி அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் (Union Finance Minister Nirmala Sitharaman) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு பெரிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்று நாடு முழுவதும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

2 /8

அதேபோல், ரயில்வே திட்டங்கள் உள்பட தமிழ்நாட்டுக்கு எவ்வித சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என ஆளும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, விஜய்யின் தவெக, சீமானின் நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். 

3 /8

அந்த வகையில், 2025-26 நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ரயில்வே துறைக்கான ஒதுக்கீடுகள் (Railway Budget 2025) குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். இதுகுறித்து டெல்லியில் உள்ள ரயில் பவனில் நேற்று (பிப். 3) அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

4 /8

அப்போது பேசிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Railway Minister Ashwini Vaishnav), ரயில்வே திட்டங்களுக்காக இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் பேசினார். அதாவது, 2025-26 நிதியாண்டில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.6,326 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.300 கோடி உயர்த்தப்பட்டுள்ளது.

5 /8

மேலும், கடந்த 2009-14 ஆண்டுகள் வரை தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.879 கோடியே ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதைவிட தற்போது சராசரியாக 7.5 மடங்கு அதிகமாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

6 /8

மேலும், ரூ.2,948 கோடி மதிப்பில் தமிழ்நாடு முழுவதும் 77 ரயில் நிலையங்கள் அம்ரித் ஸ்டேஷன் திட்டத்தின் (Amrit Station Scheme) கீழ் மறுவடிவமைப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.33,467 கோடி மதிப்பில் 2,587 கி.மீ., தூரத்திற்கான 22 ரயில்வே திட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 /8

ரயில் விபத்துகளை தடுக்க ரயில்வே துறை கவாச் அமைப்பை (Kawach System) நாடு முழுவதும் நிறுவி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு இதற்காக ரூ.1,460 கோடி செலவில் கவாச் பாதுகாப்பு அமைப்புகளை இயக்குவதற்கான 601 பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

8 /8

தமிழ்நாட்டில் 2,242 கி.மீ., ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதாகவும், அதாவது மொத்த ரயில் பாதையில் 94% மின்மயமாக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.