Budget 2024: இந்த பட்ஜெட்டில் வெளிவரக்கூடும் முக்கிய அறிவிப்புகள் என்ன? பல துறைகள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? சாமானியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ் என்ன?
Budget 2024: ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான எண்டி அரசாங்கம் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால் மக்களிடம் எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளன. அனைத்து துறைகளும் தங்கள் கோரிக்கைகளை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளன. கடந்த சில வாரங்களில் நடந்த பல கட்ட கூட்டங்களில் நிதி அமைச்சர் (Nirmala Sitharaman) பல்வேறு துறைகளில் பிரதிநிதிகளை சந்தித்தார். முழு பட்ஜெட் வரைவு தயாரிக்கப்படும் முன் இந்த கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் நிலையான விலக்கு வரம்பை (Standard Deduction) 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாய் அல்லது 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இப்படி செய்யப்பட்டால் வரி செலுத்துவோர் எந்த வரி விதிப்ப்பு முறையை தேர்ந்தெடுத்தாலும் பயனடைய முடியும். இது தவிர பிரிவு 80cc இன் கீழ் விலக்கு வரம்பில் ஏற்றம், வரிக்குட்பட்ட வருமான வரம்பில் மாற்றம், வரி அடுக்குகளில் (Tax Slabs) மாற்றம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.
விவசாயத் துறைக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்று கூறப்படுகின்றது. பிஎம் கிசான் (PM Kisan) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் தவணை ஆண்டுக்கு 6,000 ரூபாயிலிருந்து அல்லது 12,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர விவசாயத் துறையில் ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன.
கடந்த சில மாதங்களில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமான நிலையில் ரயில்வே துறையில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. இந்த பட்ஜெட்டில் புதிய ரயில்களுக்கான அறிமுகமும் எதிர்பார்க்கப்படுகின்றன. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான (Senior Citizens) ரயில் கட்டண சலுகைகள் (Train Ticket Concession) மீண்டும் கொண்டுவரப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுஷ்மான் பாரத் போன்ற சுகாதார காப்பீட்டு திட்டங்களின் கவரேஜ் அளவையும் நிதி பாதுகாப்பையும் அரசு அதிகரிக்கக்கூடும். மேலும் அதிக அரசாங்க மருத்துவமனைகள் கட்டப்படுவதற்கான அறிவிப்பும், அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சுமார் 6 கோடி மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் அடல் பென்ஷன் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் பங்களிப்பிற்கு ஏற்ப இவர்களுக்கு ஓய்வூதியமாக 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை வழங்கப்படுகின்றது. நிதியமைச்சர் இதற்கான அதிகபட்ச வரம்பை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கான கோரிக்கைகளை ஏற்கனவே அரசாங்கத்திடம் சமர்ப்பித்து உள்ளனர். 8வது ஊதியக் குழுவின் (8th Pay Commission) உருவாக்கம், 18 மாத டி அரியர் தொகை(DA Arrears), பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் கொண்டு வருதல், கருணை நியமனங்களில் 5% உச்சவரம்பை நீக்குதல், அரசாங்க காலி பணியிடங்களை நிரப்புதல், கேசுவல், ஒப்பந்த மற்றும் ஜிடிஎஸ் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு தொழிலாளர்களுக்கு ஈடான சலுகைகளை வழங்குதல் ஆகியவை இவற்றில் அடங்கும்.
வீட்டு கடனுக்கான (Home Loan) வரி விலக்கு வரம்பை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்த கோரிக்கை உள்ளது. மலிவு விலை வீட்டு வசதி திட்டத்தையும் அரசாங்கம் அறிமுகம் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகராக நன்மைகளை அதிகரிக்க அரசாங்கம் இதில் மாற்றங்களை செய்யக்கூடும். இதில் முதன்மையாக, பணி ஓய்விற்குப் பிறகு, கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் 50 சதவீத உத்தரவாத ஓய்வூதியத்திற்கான அறிவிப்பை அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் வெளியிடலாம்.
பணியாளர் வருங்கால வைப்பநிதி அமைப்பின் (EPFO) கீழ் வரும் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் (EPS) அதிகபட்ச ஊதிய வரம்பை அரசு 15,000 ரூபாயிலிருந்து 21,0000 ரூபாய் அல்லது 25,000 ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் முழுமையான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க தளங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.