ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் நடைபெறுகிறது. இதில் புதிய கேப்டன் நியமிக்கப்படலாம்.
ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. நியூஸிலாந்து அணி மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இழந்துள்ளது.
மேலும் ரோஹித் சர்மா ஒரு பேட்டராகவும் தோல்விகளை சந்தித்துள்ளார். இந்த இரண்டு தொடர்களிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தற்போது இந்திய அணியில் ரோஹித்தின் இடம் குறித்த நிச்சயமற்ற தன்மை உருவாகி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு அவர் அணியில் எடுக்கப்பட்டாலே ஆச்சரியம் தான் என்ற நிலை உருவாகி உள்ளது.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி அணியில் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் அடுத்ததாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் புதிய டெஸ்ட் கேப்டனாக பும்ரா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரில் பும்ரா தலைமையில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார் பும்ரா. அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டால் அது இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும்.