Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025 விரைவில் தாக்கல் செய்யப்படும் நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் சில திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu Budget 2025: 2021 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் தேர்தல் அறிக்கையில் இருந்த பல திட்டங்களையும், இல்லாத பல திட்டங்களையும் திமுக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இருப்பினும், சில வாக்குறுதிகள் இன்னும் செயல்பாட்டுக்கு வராத நிலையில், அவை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025-26 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் (Tamil Nadu Budget 2025) விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என கூறப்படும் நிலையில், வரும் மே மாதம் வரை கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
பட்ஜெட் கூட்டத்தொடரில் 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) மற்றும் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் (MRK Panneerselvam) அவர்களுக்கும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து விவசாய பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது.
மத்திய அரசு அதன் 2025-26 பட்ஜெட்டில் (Union Budget 2025), ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் (Income Tax) என அறிவித்தது பல்வேறு தரப்பு மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதுபோல், தமிழ்நாடு பட்ஜெட்டிலும் மக்கள் எதிர்பார்க்கும் சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் தற்போதைய திமுக ஆட்சி தரப்பில் இதுதான் கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டாகும். அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்பதால், இந்த பட்ஜெட்டிலேயே பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) அறிவிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
2021 சட்டப்பேரவை தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளான, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு (Hike In Senior Citizen Pension), கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimmai Thogai), பெண்களுக்கு விலையில்லா பேருந்து பயணம் ஆகிய திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதேபோல், சென்னையின் அடுத்தக்கட்ட மெட்ரோ பணிகள் மட்டுமின்றி மதுரை, கோவை மெட்ரோ குறித்த அறிவிப்பும் கடந்தகால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அரசு பள்ளியில் காலை உணவு, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதலவன் திட்டம் உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையில் இடம்பெறாவிட்டாலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாத சில திட்டங்களை இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடப்படும் நிலையில், அது மாதம் ஒருமுறையாக மாற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. கேஸ் மானியம், பெட்ரோல் விலை குறைப்பு, 30 வயதுக்கு உட்பட்ட தமிழக மாணவர்களின் கல்விக்கடன் ரத்து உள்ளிட்டவை வாக்குறுதிகளாக வழங்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்படவில்லை.
அந்த வகையில், இந்த 2025-26 பட்ஜெட்டில் மின்கட்டணம் கணக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் கல்விக்கடன் ரத்து குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பொதுமக்களின் எதிர்பார்ப்பு அரசு பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.