Cholesterol Control Tips: இன்றைய காலகட்டத்தில் பலருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பதை நாம் காண்கிறோம். இது மிகவும் பொதுவான ஒரு விஷயமாகி விட்டது.
Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் பிரச்சனை எந்த வயதினரையும் பாதிக்கும். தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாறிவரும் வாழ்க்கை முறையாலும் இந்தப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. வெளி உணவுகளை உண்பதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் வாய்ப்புகள் பெருமளவில் அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் உடலுக்கு இன்றியமையாதது, ஆனால் அதன் அதிகரிப்பு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். சில ஆரோக்கியமான பொருட்களை உட்கொள்வதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
உடலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. நல்ல கொலஸ்ட்ரால் உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைக்கிறது. பல நோய்களில் இருந்து விடுபடவும் உதவுகிறது. ஆனால், அதிக கொலஸ்ட்ரால் கடுமையான நோய்களை உண்டாக்கும். ஆகையால் உடலில் கெட்ட கோலஸ்ட்ராலை எப்போதும் கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
பல எளிய இயற்கையான வழிகளில் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதற்கு நமது தினசரி டயட்டில் சில உணவுகளை சேர்ப்பது மிக அவசியம். கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை கெட்ட கொழுப்பை குறைத்து, உடலுக்கு தெவையான ஆரொக்கிய நன்மைகளை அளிக்கின்றன. கொலஸ்ட்ரால் நோயாளிகள் அதிக அளவில் காய்கள் மற்றும் பழங்களை உட்கொள்ளலாம்.
பூண்டு ஆரொக்கியத்தின் களஞ்சியமாக கருதப்படுகின்றது. தினமும் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு 10% குறையும். கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த விரும்பும் நபர்கள் தினமும் இரண்டு பூண்டு பற்களை உட்கொள்ளலாம்.
ஓட்ஸில் அதிக அளவில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் பீட்டா குளுக்கான் உள்ளது. இதன் மூலம் குடல்களை சுத்தம் செய்ய உதவி கிடைக்கின்றது. கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகின்றது. இது செரிமானத்தையும் சீராக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை பிணைத்து உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கவும் நெல்லிகாய் உதவுகின்றது. இதுல் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
வால்நட்ஸ், பாதாம், பீநட் பட்டர், ஆளிவிதை மற்றும் சியா விதைகள் போன்ற உலர் பழங்கள் மற்றும் விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இவற்றால் உடலுக்கு இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
அவுரிநெல்லி, ஸ்ட்ராபெர்ரிகள் போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இவை இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. கெட்ட கொழுப்பை குறைக்க இவை உதவுவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.