Train Ticket Cancel | ரயில் நிலைய கவுண்டரில் இருந்து வாங்கிய முன்பதிவு டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
Train Ticket Cancel Rules | நீங்கள் கவுண்டரில் இருந்து ரயில் டிக்கெட்டை வாங்கியிருந்தாலும், ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்திலிருந்து ஆன்லைனில் ரத்து செய்யலாம். எப்படி என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே தொடர்ந்து டெக்னாலஜி ரீதியாக அப்டேட் ஆகிக் கொண்டே வருகிறது. அந்தவகையில் ரயில்வே முன்பதிவு டிக்கெட் செயல்முறைகள் இன்னும் எளிதாக்கியுள்ளன. தற்போது, பெரும்பாலான ரயில் பயணிகள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு தளமான ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள்.
அவ்வாறு ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்த டிக்கெட்டை நீங்கள் எளிதாக ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெறலாம். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது ரயில் கவுண்டரில் டிக்கெட் வாங்கினால் ஆன்லைனில் கேன்சல் செய்ய முடியாது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் ரயில்நிலையத்துக்கு நேரடியாக சென்று முன்பதிவு டிக்கெட் வாங்கினாலும் ஆன்லைனில் கேன்சல் செய்ய முடியும். ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது செயலி மூலம் ரத்து செய்யக்கூடிய ஆப்சன் இருக்கிறது.
பி.ஆர்.எஸ் கவுண்டரில் இருந்து எடுக்கப்பட்ட ஆஃப்லைன் டிக்கெட்டை ரத்து செய்ய, நீங்கள் ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்துக்கு செல்ல வேண்டும். அங்கே டிக்கெட்டை ரத்து செய்யும் ஆப்சனை பெறுவீர்கள். அதைக் கிளிக் செய்த பிறகு, கவுண்டர் டிக்கெட்டை ரத்து செய்வதற்கான தேர்வு செய்ய வேண்டும்.
இப்போது நீங்கள் (https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf) என்ற பக்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதற்குப் பிறகு, கவுண்டர் டிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள PNR எண் மற்றும் ரயில் எண்ணுடன் பாதுகாப்பு கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். பின்னர் ஒரு OTP அதாவது ஒரு முறை கடவுச்சொல் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும்.
அதை உள்ளிட்ட பிறகு டிக்கெட்டை ரத்து செய்வதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள். இந்த OTP, கவுண்டர் டிக்கெட் எடுக்கும்போது படிவத்தில் நீங்கள் உள்ளிட்ட அதே மொபைல் எண்ணுக்கு தான் வரும். பின்னர் திரையில் ஒரு சாட்பாக்ஸ் வரும். அதனை தொடர்ந்து பயணிகளின் விவரங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
அதனை தேர்வு செய்து Submit கொடுத்தால் உங்கள் PRS கவுண்டர் டிக்கெட் ரத்து செய்யப்படும். ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை ரத்து செய்திருந்தாலும் ஆப்லைனில் வாங்கிய டிக்கெட்டை எடுத்துக் கொண்டு நீங்கள் ரயில் நிலையம் சென்றாக வேண்டும்.
அப்போது தான் உங்களின் டிக்கெட் பணம் திரும்ப கிடைக்கும். ரயில்வே விதிகளின்படி, நீங்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்திருந்தால், நீங்கள் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு PRS கவுண்டருக்குச் சென்று டிக்கெட்டை டெபாசிட் செய்ய வேண்டும்.
நீங்கள் காத்திருப்புப் பட்டியல் அல்லது RAC டிக்கெட்டை ரத்து செய்தால், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு PRS கவுண்டரில் டிக்கெட்டை டெபாசிட் செய்வதன் மூலம் பணத்தைத் திரும்பப் பெறலாம்.