India National Cricket Team: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட்டில் மோதிக்கொள்வது எப்போதும் பரபரப்பான ஒன்றுதான். ஆனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்க வேண்டியதாகிவிட்டது. 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நிறுத்திவிட்டது. ஐபிஎல் போட்டிகளிலும் அதன்பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொள்ளவில்லை.
2012-13 காலகட்டங்களில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி (Team Pakistan) சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்பின் பாகிஸ்தான் அணியும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்திய அணி (Team India) கடைசியாக 2005-06 காலகட்டங்களில் பாகிஸ்தானுக்குச் சென்றது. தற்போது வரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களிலும், ஆசிய கோப்பை தொடர்களிலுமே மோதிக்கொள்கின்றன. இரு நாடுகளுக்குமான இருதரப்பு தொடர்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இரு அணிகளும் கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 ஆண்டுகள் ஆகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025
அந்த வகையில், பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியில் இருந்து மார்ச் 9ஆம் தேதி வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy 2025) தொடர் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான், ஓடிஐ உலகக்கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட மொத்தம் 8 அணிகள் இந்த தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. இருப்பினும், தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டது. எனவே, இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையிலோ, ஐக்கிய அரபு அமீரகத்திலோ நடத்த வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பெங்களூரு டெஸ்டில் இந்திய அணிக்கு சகுணமே சரியில்லை, 2 விக்கெட் இப்படியா விழும்
இதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளாதபட்சத்தில் தொடரை இந்திய அணி புறக்கணிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இதுகுறித்து தொடர்ந்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தரப்பிலும் தனித்தனியாக ஐசிசியிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணி பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதால் இந்திய அணி, நாட்டில் எப்படியாவது விளையாட வைப்பதன் மூலம் சுற்றுலாவை பெருக்கிக் கொள்ள திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கொடுத்த ஐடியா
ஏனெனில் பாகிஸ்தானுக்கு தற்போதுதான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகள் தயங்காமல் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. மேலும், 1996ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் ஒரு ஐசிசி தொடரை நடத்த இருக்கிறது. தற்போது சுற்றுலாவை அதிகப்படுத்துவதே அந்நாட்டின் முக்கிய நோக்கமாகவும் இருக்கிறது. 2011 ஐசிசி உலகக் கோப்பை தொடரையே இந்தியா, வங்கதேசம் ஆகியவற்றுடன் பாகிஸ்தானும் நடத்த இருந்தது. ஆனால், 2008ஆம் ஆண்டு பிரச்னைக்கு பின் அதன் உரிமம் பறிக்கப்பட்டது. அந்த தொடர் இந்தியாவிலும், வங்கதேசத்திலும் மட்டுமே நடந்தது.
இந்நிலையில், தற்போது இந்திய அணியை பாகிஸ்தானுக்கு வர வைப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (Pakistan Cricket Board) புதிய திட்டம் ஒன்றை பிசிசிஐக்கு முன்மொழிந்துள்ளது. அதாவது, இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து போட்டிகளை விளையாட வேண்டும் என்றும், போட்டியை விளையாடிய பின்னர் கூட பாதுகாப்புக்காக இந்திய அணி மீண்டும் நாடு திரும்பிக்கொள்ளலாம் என்று் தெரிவித்துள்ளது. அதாவது, பாகிஸ்தானில் போட்டியை விளையாடிவிட்டு, அங்கு தங்குவதற்கு பதில் விமானம் மூலம் சண்டிகர் அல்லது டெல்லிக்கு திரும்பிக்கொண்டு, அடுத்த போட்டிக்கு அங்கு வந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கேற்பவே பிசிசிஐ (BCCI) இதில் முடிவெடுக்கும். வீரர்களை பொறுத்தவரை விளையாடும் ஆடுகளங்களில் பயிற்சி செய்யாமல், போதிய நேரம் செலவழிக்காமல் போட்டி முடிந்த பின்னர் உடனே நாடு திரும்புவதும், போட்டிக்கு சில மணிநேரம் முன் வருவதும் என்பது சரியானதாக இருக்காது. எனவே இதில் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் இடையே அதிக ஆர்வம் எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ