இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் ஞாயிறு அன்று நடைப்பெற்ற டி20 போட்டியில் புதியதொரு சாதனை படைத்துள்ளார்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நாக்பூரில் நடைப்பெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் ஹார்ட்ரிக் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் ஹார்ட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார்.
இப்போட்டியில் 3.2 ஓவர்கள் வீசிய தீபக், 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதில் ஒரு ஹாட்ரிக் அடக்கம். இதன் மூலம் அவர் இலங்கையின் அஜந்தா மெண்டிஸை விஞ்சி சாதனை படைத்தார். முன்னதாக 2012-ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் மெண்டிஸ் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில் தற்போது 7-6 விக்கெட் வீழ்த்திய தீபக், மென்டீஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
.@deepak_chahar9 today became the first Indian to pick up a hat-trick in T witter.com/qNctKUVgmF
— BCCI (@BCCI) November 10, 2019
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், 18-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்த தீபக், தொடர்ந்து 20-வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார். இதன் மூலம் அவர் டி20 போட்டிகளில் தனது முதல் ஹார்ட்ரிகினை பதிவு செய்தார்.
குறித்த இப்போட்டியில் சாஹர் லிட்டன் தாஸ், சௌமயா சர்க்கார், முகமது மிதுன், அமினுல் இஸ்லாம், ஷைபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை வங்கதேச அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 62(33) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக KL ராகுல் 52(35) ரன்கள் குவித்தார். வங்கதேசம் தரப்பில் ஷபிக்புல் இஸ்லாம், சௌமயா சர்கார் தலா இரண்டு விக்கெட்டுகள் குவித்தனர்.
இதனையடுத்து 175 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர் மொஹமது நாயிம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 81(48) ரன்கள் குவித்தார். எனினும் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற ஆட்டத்தின் 19.2-வது பந்தில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்த வங்கதேச அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.