IPL 2020 இன் முதன்மை ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து Vivo வெளியேறிய பின்னர், யோகா குரு பாபா ராம்தேவின் (Baba Ramdev) பதஞ்சலி, இந்த மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வுக்கான ஸ்பான்சர்ஷிப் ஏலத்தில் பங்கெடுக்க பரிசீலித்து வருவதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.திஜராவாலா இதை உறுதிப்படுத்தியுள்ளார். பதஞ்சலி, தன் பிராண்டுக்கு உலகளாவிய சந்தைப்படுத்தல் தளத்தை வழங்க விரும்புவதால் இந்த ஆண்டுக்கான IPL தலைமை ஸ்பான்சர்ஷிப்பைப் பெற நிறுவனம் பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.
IPL-ன் முந்தைய ஸ்பான்சரான Vivo-வுடனான BCCI-ஐயின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. Vivo ஒரு சீன நிறுவனம் என்பதால் இதை முதன்மை ஸ்பான்சராகக் கொள்ளக்கூடாது என பல சர்ச்சைகள் உருவானதும் இதற்குக் காரணம்.
இந்தியா சீனா இடையில் நிலவி வரும் பதட்டமான சூழல் காரணமாக, வரவிருக்கும் IPL பதிப்பிற்கான சீன மொபைல் போன் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நிறுத்தியது.
ஆரம்பத்தில், சீன நிறுவனங்கள் உட்பட அனைத்து பழைய ஸ்பான்சர்களுடன் போட்டியைத் தொடர BCCI எடுத்த முடிவு விமர்சனத்திற்கு வழிவகுத்தது. அதே நேரத்தில் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியாவிற்கான அழைப்பை எதிர்க்கும் செயல் என்று சிலர் கூறினர்.
இந்நிலையில், உள்நாட்டு பிராண்டான பதஞ்சலி (Patanjali) இப்போது BCCI-ன் முன் ஒரு திட்டத்தை முன்வைத்து வருகிறது. மார்க்கெட்டிங் வல்லுநர்கள் இந்த பிராண்ட் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நட்சத்திர சக்தியை வெளிப்படுத்தாது என்று கருதுகின்றனர். ஆனால் IPL-க்கு பதஞ்சலி, தலைமை ஸ்பார்சரானால், அது, IPL-ஐ விட பதஞ்சலிக்கு அதிக லாபகரமானதாக இருக்கும்.
ALSO READ: இந்த ஆண்டு தொடரில் இருந்து ஐபிஎல் ஸ்பான்சர் விவோ வெளியேற முடிவு
எனினும், சீனாவுக்கு எதிரான உணர்வுகள் முன்னெப்போதையும் விட வலுவாக வேரூன்றியிருக்கும் இந்த நேரத்தில், ஒரு தேசியவாத கண்ணோட்டத்தில் தலைமை ஸ்பான்சர்ஷிப்பை ஒரு இந்திய பிராண்ட் வைத்திருப்பதும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. முன்னதாக BCCI தலைவர் சவுரவ் கங்குலி, இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 13 வது பதிப்பிற்கான தலைமை ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து Vivo வெளியேறுவது நிதி நெருக்கடியாக கருதப்படக்கூடாது என்றார்.
IPL வர்த்தக வருவாயில் தலைமை ஸ்பான்சர்ஷிப் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. ஏனெனில் அதில் பாதி வருவாய், எட்டு உரிமையாளர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
தகவல்களின்படி, Vivo, IPL தலைமை ஸ்பான்சர்ஷிப்புக்கான உரிமையை 2018 முதல் 2022 வரை ஐந்து ஆண்டுகளுக்கு பெற்றிருந்தது. இதன் குறிப்பிடப்பட்ட மதிப்பு சுமார் 2,190 கோடி ரூபாய் அதாவது ஆண்டுக்கு சுமார் 440 கோடி ரூபாய் ஆகும்.