ஐபிஎல் 2023 பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இரு அணிகளுமே சம பலத்துடன் இருந்தாலும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த போட்டியில் எப்படி விளையாடப்போகிறது என்பதை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். முன்னாள் ஸ்டார் பிளேயர்கள் இல்லாமல் புதிய நட்சத்திர வீரர்களுடன் களமிறங்க இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
மேலும் படிக்க | IPL2023: சிஎஸ்கேவுக்கு வரப்போகும் இங்கிலாந்து புயல்: உற்சாகத்தில் தோனி..!
சுரேஷ் ரெய்னா, டூவைன் பிராவோ ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்கள். பாப் டூபிளசிஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக உள்ளார். இவர்கள் அந்த அணியின் நம்பிக்கை தூண்களாக இருந்த நிலையில், அவர்களுக்கு பதிலாக ராயுடு, பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகியோர் சிஎஸ்கேவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். இவர்களுடன் எப்போதும் அந்த அணியின் முக்கிய வீரராக இருப்பவர் ஜடேஜா. உலகின் தலைச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் முதன்மையான இடத்தில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா, சிஎஸ்கே அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என பல முன்னாள் வீரர்களின் கணிப்பாக இருக்கிறது. ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் அண்மையில் அளித்த பேட்டிகளில் கூட ஜடேஜாவின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் என கூறினர்.
அவர் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருப்பார் என்றும் புகழாரம் சூட்டியிருக்கின்றனர். அதற்கேற்ப பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இப்போது சூப்பரான ஃபார்மில் இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அதே உற்சாகத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் எப்போதுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனாகவும், தோனியின் ஆஸ்தான தளபதியாகவும் இருந்திருக்கிறார் ஜடேஜா.
அதே பணியை இந்த ஐபிஎல் தொடரிலும் தொடரும்பட்சத்தில் தனி ஒருவராக சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுவிடுவார். 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ஜடேஜா இதுவரை 2502 ரன்களும், 210 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். முழங்கால் காயத்தில் அவதிப்பட்டு கடந்த ஓராண்டாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியிருந்த அவர், ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு கம்பேக் கொடுத்தார். அவரின் வருகை நிச்சயம் சிஎஸ்கேவுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ