புதுடில்லி: இன்று நடைபெற்ற கொரியா ஓபன் போட்டியின் முதல் சுற்றில் பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து சாய்னா நேவாலும் வெளியேறினார். அவர் முதல் சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவின் கிம் கா யூனுக்கு (Kim Ga Eun) எதிரான மூன்றாவது செட்டின் போது காயம் அடைந்ததால் சாய்னா நேவால் (Saina Nehwal) தனது போட்டியில் இருந்து விலகினார். முதல் செட்டை சாய்னா 21-19 என்ற கணக்கில் வென்றார். ஆனால் இரண்டாவது செட்டில் 18-21 என்ற கணக்கில் இழந்தார். கடைசி செட்டின் ஆரம்பத்திலேயே அவருக்கு காயம் ஏற்ப்பட்டதால் தொடர்ந்து ஆட முடியவில்லை. மேலும் எதிர் வீராங்கனையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால், 1-8 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த போது அவர் வெளியேறுவதாக அறிவித்தார். இதன்மூலம் அவர் கொரியா ஓபன் (Korea Open) தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இந்திய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.
அதேபோல இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான உலக சாம்பியன் பேட்மிண்டன் தொடரில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து (PV Sindhu) கொரியா ஓபன் போட்டியின் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார். சாய்னா நேவால் காயம் மற்றும் பி.வி சிந்து தோல்வியால் ஏமாற்றம் அடைந்த இந்திய ரசிகர்கள், பருப்பள்ளி காஷ்யப்பின் (Parupalli Kashyap) வெற்றியின் மூலம் சிறிது நிம்மதி பெற்றனர். பி காஷ்யப் 21-16, 21-16 என்ற செட் கணக்கில் லு சியா ஹுவாங்கை தோற்கடித்து ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் நுழைந்தார். இந்த போட்டி 42 நிமிடங்கள் நீடித்தது.
முன்னதாக, ஆண் ஒற்றையர் பிரிவில் பி. சாய் பிரனீத்துக்கு (B. Sai Praneeth) அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த இந்திய வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். ஆண்ட்ரியாஸ் அன்டன்சனை எதிர்த்து ஆடும் போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகினார். அந்த சுற்றில் அவர் 11-21, 7-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தார்.