IND vs AUS World Cup Final: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 19) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி மிக கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்க உள்ளது. நிறைவு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இறுதிப்போட்டியை ஒட்டி திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனல்பறக்க காத்திருக்கும் இறுதிப்போட்டி
அரையிறுதி சுற்றில் நியூசிலாந்தை இந்திய அணியும், தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலிய அணியும் வீழ்த்தி உலகக் கோப்பைக்கான இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன. குறிப்பாக, இந்தியா 4ஆவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 8ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா இதுவரை 2 முறை சாம்பியனாகி உள்ளது, ஆஸ்திரேலிய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மேலும் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை படுதோல்வி அடைய செய்து ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கியது. அந்த வகையில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வென்று பழிதீர்க்கவும் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெறியோடு காத்திருக்கிறது.
பிரதமர் மோடி வருகை
நடப்பு உலகக் கோப்பை இறுதிப்போட்டி அனல் பறக்க உள்ள நிலையில் பல்வேறு தலைவர்களும், மூத்த கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் இப்போட்டியை காண வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இறுதிப்போட்டியின் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்களும் இதில் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ், மகேந்திர சிங் தோனி உள்ளிட்டோரும் போட்டியை காண வர அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் போட்டியை காண வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர், ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட பல வீரர்களும் போட்டியை காண வருவார்கள் என கூறப்படுகிறது. மேலும், பல மூத்த கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், மாநில கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.
இந்திய விமான படை
மேலும், இறுதிப்போட்டியை ஒட்டி சில நிறைவு விழா கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல வெளிநாட்டு பாடகி துவா லிபா, இந்திய பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ப்ரீதம் சக்ரவர்த்தி மற்றும் குஜராத்தை சேர்ந்த பாடகர் ஆதித்யா கதாவி ஆகியோர் இந்நிகழ்வில் பாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டிக்கு இதே நரேந்திர மோடி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இதிலும் ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய விமானப்படையின் சூர்யா கிரண் ஏரோபாட்டிக் குழு, 10 நிமிடத்திற்கு கண்கவர் விமான சாகசத்தை நிகழ்த்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | 3 பார்மட்டிலும் கேப்டன் பொறுப்பை துறந்தார் பாபர்... உருக்கமான பதிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ