தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆறுதல் கூறினார்.
Tamil Nadu governor Banwarilal Purohit reaches #Thoothukudi's Government General hospital to meet victims of Sterlite Protests. pic.twitter.com/AuYe25EhDf
— ANI (@ANI) May 29, 2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை சற்று முன்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து, ஆறுதல் கூறி வருகின்றனர். நேற்று முன்தினம், செய்தித் துறை அமைச்சர் ராஜு, மருத்துவமனைக்கு சென்றார். நேற்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு சென்று, ஆறுதல் கூறினார்.'
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை விமானத்தில் துாத்துக்குடி சென்றார். விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதை கலெக்டர், எஸ்.பி., மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆறுதல் கூறினார்.