சென்னை: குடிசை மாற்று வாரியம் மூலம் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மற்றும் பிற நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தனிவீடுகள் ஆகியவற்றை தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் கட்டி வருகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் 59,023 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கட்டியுள்ளது.
இந்த ஆண்டு, குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சென்னை மற்றும் பிற நகரங்களில் ரூ.1,800 கோடி செலவில் 50,000 குடியிருப்புகள், அதாவது, பயனாளிகள் தங்கள் இடங்களில் வீடுகள் கட்டும் வகையில் 45,000 வீடுகளுக்கும், 5,000 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தனி வீடு ஒவ்வொன்றும் 300 சதுர அடி தரைப் பரப்பளவில் பயனாளிகள் தாங்களாகவே கட்டிக் கொள்ள வழிவகை செய்யப்படும்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், தேவையான தொழில்நுட்ப வழி காட்டுதல்களை வழங்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.2,10,000 வீதம் மொத்தம் ரூ.945 கோடி மானியம் வழங்கப்படும்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 400 சதுர அடி கட்டடப்பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, பால்கனி, குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றை கொண்டதாக அமையும். இவ்வீடுகள் அனைத்திற்கும் மின்வசதி மற்றும் குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.