மக்களவைத் தேர்தலில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள அதிமுக, தனது 59% வாக்குகளை இழந்துள்ளது!!
2019 மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக, தாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது அதிமுக, வேலூரை தவிர்த்து தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. கூட்டணி கட்சியுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட 21 தொகுதிகளில் அதிமுக வெறும் 18.48% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வியை அக்கட்சி அடைந்துள்ளது.
ஜெயலலிதாவின் தலைமையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தனித்து போட்டியிட்ட அதிமுக 39 தொகுதியில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று 44.92% வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் தற்போது அக்கட்சி தன்னுடைய 59% வாக்குகளை இழந்துள்ளது. 1996 மற்றும் 2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாத போதும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 25%-க்கும் அதிகமாகவே இருந்தது. இதனிடையே அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவின் வாக்கு சதவீதம் 5.19 சதவீதத்திலிருந்து, 2.19 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆனால், இதற்கு நேர்மாறாக, கடந்த மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட திமுக 8.85% அதிகமாக பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 32.76%-ஆக உள்ளது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 4 கூட்டணி கட்சிகளையும் தனது சின்னத்திலே நிறுத்தியது. எனவே உதயசூரியன் போட்டியிட்ட 24 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்றது.
இதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் வாக்கு சதவீதமும் தற்போது அதிகரித்துள்ளது. 2014 தேர்தலில் வெறும் 4.37 சதவீதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி தற்போது 12.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களான ஜோதிமணி, திருநாவுக்கரசர் ஆகியோர் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு சதவீதமும் தலா 2.4% அதிகரித்துள்ளது.