இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மனுவுக்கு பதிலளிப்பதற்கு சசிகலா தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. இதையடுத்து ஒரு நாள் கூடுதல் அவகாசம் அளித்தது. அதன்படி நேற்று மாலைக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களது அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
டெல்லி உள்ள தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து சசிகலா அணியினரும் 16-ம் தேதி நசீம் ஜைதியை சந்தித்து, பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்களே இப்போது எதிர்க்கின்றனர் என கூறியதோடு, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்கவும் கேட்டுக்கொண்டனர்.
இதன்பின்னர், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் ஒரு மனு தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யப்பட்டது. டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கியிருந்தார். தற்போது மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கட்சியின் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. எனவே, இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் சசிகலா நடராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக மார்ச் 20-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. ஆனால், விளக்கம் அளிக்க சசிகலா தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. இதையடுத்து 21-ம் தேதி பதில் தர உத்தரவு பிறப்பித்துள்ளது எனவே சசிகலா அணி நேற்று பதில் மனு தாக்கல் செய்கிறது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக சசிகலா தரப்பினரையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரையும் 22-ம் தேதி (இன்று) காலை நேரில் அழைத்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறது. இதற்காக இருதரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.