CM Stalin Resolution On Governor RN Ravi: சட்டமன்ற நடைமுறை தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்துக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து கடந்த ஏப். 6ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார். அதாவது, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் மாணவர்கள் பங்கேற்ற விழாவில், ஆளுநர் ஆர்.என் ரவி சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டது.
முதல்வரின் கண்டன அறிக்கை
இதையொட்டியே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில்,"பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். மேலும், தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது ஆகும் எனவும் கூறியிருந்தார்.
14 கோப்புகள் முடக்கம்
அதுமட்டுமின்றி, அந்த அறிக்கையில்,"கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள் சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வழக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத முடக்குவாதச் செயலாகவே அமைந்துள்ளது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது கடமை முடிந்ததாக இருக்கிறார், ஆளுநர்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சரின் கண்டனத்தை அடுத்து சட்டத்துறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோரும் ஆளுநரின் செயல்பாடுக்கும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் கொண்டவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் உள்ளிட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் என தெரிகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை (ஏப். 10) வழக்கம் போல் தொடங்கப்படும். சட்டப்பேரவையில் இன்று காலை நிதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத்துறை ஆகிய துறைக்கான மானிய கோரிக்கை நடைபெற உள்ளது. செய்தி மற்றும் விளம்பரம், வணிகவரி ஆகிய துறைக்கான மானிய கோரிக்கை மாலை நடைபெற உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ