சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு டிடிவி.தினகரன் வெற்றி பெற்றார். அவர் தலைமை செயலக வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் எம்எல்ஏவாக நேற்று பதவியேற்று கொண்டார். தொடர்ந்து அவர் சட்டப்பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்து கொண்டார். அவருக்கு சபாநாயகர் தனபால் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்பட தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும், கட்சி பதவி பறிக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். சசிகலாபுஷ்பா எம்.பி.யும் டி.டி.வி.தினகரனுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தபோது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் யாரும் தலைமைச் செயலகத்தில் இல்லை.
பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டி: சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் அவர்களுடைய வேலையை செய்வார்கள். சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக, ஆர்.கே.நகர் தொகுதி பிரதிநிதியாக என்னுடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து ஜனவரி இறுதிக்குள் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்ற தீர்ப்பு வரும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்.
2 அல்லது 3 மாதங்கள் இழுக்கலாமே தவிர அதன் பின்னர் ஆட்சியை தக்கவைக்க முடியாது. 5 அல்லது 6 பேர் வழிவிட்டால் மற்றவர்கள் எங்களோடு வருவார்கள், ஆட்சியை தக்கவைக்கலாம். கட்சி மட்டும் அல்ல தமிழக மக்களும் எங்களோடு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் மற்றும் அந்த 4 பேருக்கும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் உதவி செய்திருக்கிறார்கள் என்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். அதை அவர்கள் திரும்பிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.
முன்னதாக, பதவி ஏற்க வந்த டி.டி.வி.தினகரனுக்கு அடையாறில் உள்ள அவருடைய இல்லத்தில் இருந்து வழிநெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடைய ஆதரவாளர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலகம் வெளியேயும் திரளான ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
சில இடங்களில் சாலையை மறித்து தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதால் மெரினா கடற்கரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.