மக்களவை தேர்தலை சந்திக்கக தமிழ் மாநில காங்கிரஸ் தயாராகி வருகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சி தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுகிறது.
தனி சின்னத்தில் போட்டியிடுவதா? அல்லது சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதா? என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். எங்களுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேர்தல் ஆணையம் நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம் என நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இன்று தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் களம் காணும் என்.ஆர்.நடராஜன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், தமாகா, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.