Erode MP Ganesamoorthy Passes Away: நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கணேச மூர்த்தி. இவர் கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி. ஆக இருந்து வந்தார்.
தற்போது தி.மு.க. கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் துரை வைகா போட்டியிடுகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசமூர்த்தி மார்ச் 24 ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து அதிக மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்பட்டது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட கணேசமூர்த்தி ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாரடைப்பால் உயிரிழந்தார்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 72 மணி நேரமாக வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 5.15 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.முன்னதாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நலத்தை வைகோ, துரை வைகோ உள்ளிட்ட மதிமுக தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர். அப்போதே 50 சதவீதம் தான் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கணேசமூர்த்தியின் இறப்பைத் தொடர்ந்து மருத்துவ அறிக்கை வெளிவந்த பின்னரே இறப்பிற்கான முழு காரணம் தெரியவரும்.
தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு போலீசார் வந்த பின்பு உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் கணேசமூர்த்தியின் உடல் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. கணேச மூர்த்தியின் உடல் கோவை தனியார் மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. உடல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் மதிமுக உருவானதில் இருந்து கணேச மூர்த்தி அக்கட்சியில் உள்ளார். 2016ஆம் ஆண்டு இவர் கட்சியின் பொருளாளராக வைகோவால் நியமிக்கப்பட்டார்.
மேலும் படிக்க | மக்களவைத் தேர்தலில் களம் காணும் அடுத்த வாரிசுகள்
வைகோ உருக்கம்
கணேசமூர்த்தியின் மறைவு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 'கொங்குச் சீமையின் கொள்கை வேங்கை ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. மறைவு!' என உருக்கமாக வைகோ எழுதிய அந்த இரங்கல் குறிப்பில், "ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், இளமைக் காலம் தொட்டு தியாக வேங்கையாக என்னோடு பயணம் செய்த ஆருயிர் சகோதரர் அ.கணேசமூர்த்தியின் மறைவுச் செய்தி கேட்டு ஆராத் துயரமும், அளவிட முடியா வேதனையும் அடைந்தேன்.
சென்னை தியாகராயர் கல்லூரியில் படித்த காலத்தில் மாணவர் அணியில் இணைந்து திமுகவை வளர்த்தெடுக்க என்னோடு பாடுபட்ட காலங்கள் பசுமையாக இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. ஆதிக்க இந்தியை வேரோடு சாய்ப்பதற்காக ஆண்டு 65இல் மாணவர் சேனை நடத்திய எழுச்சி மிகு போராட்டத்தில்
என்னோடு களம் கண்ட வீர வேங்கைதான் சகோதரர் கணேசமூர்த்தி.
கொள்கை மறவர் கணேசமூர்த்தி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மலர்ந்த நேரத்தில் திமுகவின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த அவர் என்னோடு கைகோர்த்துக் கொண்டு கட்சித் தொடங்கவும், வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லவும் முனைப்புடன் செயலாற்றிய செயல் வீரர்தான் சகோதரர் கணேசமூர்த்தி.
ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளராக, கழகத்தின் பொருளாளராக - சட்டமன்ற உறுப்பினராக - நாடாளுமன்ற உறுப்பினராக பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியது மட்டுமல்ல, பொடா சட்டத்தில் என்னோடு 19 மாத காலம் சிறைவாசம் ஏற்ற கொள்கை மறவர்தான் சகோதரர் கணேசமூர்த்தி.
மேலும் படிக்க | ஈரோடு எம்பி கணேசமூர்த்தி விஷம் அருந்த இது தான் காரணமா? அதிர்ச்சி தகவல்!
அனைவராலும் பாரட்டப்பட்டவர்
ஈரோடு மாநகரில், அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களையும், அனைத்திந்தியத் தலைவர்களையும் அழைத்து எழுச்சியுடன் நடத்திய மாபெரும் மாநாடு, கழகத்தின் பொதுக்குழு கூட்டங்கள், பொதுவாழ்வில் பொன்விழா கண்ட என்னை பாராட்டிப் பெருமைப்படுத்திய மாநாடு என எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தியவர். கொங்குச் சீமையில் திராவிட இயக்கம் வேரூன்ற அரும்பணி ஆற்றிய பெருமைக்குரியவர்தான் சகோதரர் கணேசமூர்த்தி.
தமிழ்நாடே என் தாய்நாடு
கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற போது, 'தமிழ்நாடே என் தாய்நாடு' என்று முழக்கமிட்டு பதவி ஏற்ற நிகழ்வு நம் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும். கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் பாராட்டத்தக்க பொதுவாழ்க்கையை நடத்தி, மதிமுகவுக்கு பெருமை சேர்த்தவர் சகோதரர் கணேசமூர்த்தி.
எதிர்பாரா சூழலில் துயர முடிவை மேற்கொண்டு, கோவை மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுடனும், பதற்றத்துடனும் சென்றேன். அவரது மகன் கபிலன், மகள் தமிழ்ப்பிரியா ஆகியோரைச் சந்தித்து ஆறுதலை தெரிவித்தேன். மருத்துவர்களிடம் கணேசமூர்த்திக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்தேன்.
ஆழ்ந்த இரங்கல்
'இதுமாதிரியான நிலையில், ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம். அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும்போதும் இரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம். விஷ முறிவுக்கான சிகிச்சையும், எக்கோவும் கொடுக்கப்படுகிறது. ஆதலால் நம்பிக்கையோடு காத்திருப்போம்' என்று மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு எப்படியும் சகோதரர் கணேசமூர்த்தி உயிர் பிழைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன்தான் நான் அங்கிருந்து புறப்பட்டு வந்தேன்.
ஆனால் முடிவுகள் வேறாகவிட்டன. கல்லூரி காலம் தொட்டு கொள்கை உணர்வோடு பழகிய அன்புச் சகோதரரை - மதிமுகவின் கொங்குச் சீமையின் கொள்கைக் காவலரை இழந்த பெரும் துயரில் கண்ணீர் வடிக்கிறேன். அவரது பிரிவால் கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், மதிமுகவின் கண்ணின் மணிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | துரை வைகோவின் அடுத்த பிளான் என்ன?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ