தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை....
விதிமீறி வைக்கப்படும் பேனர் தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக சென்னையில் அனுமதியின்றி பல இடங்களில் சோனியா, ராகுலை வரவேற்கவும், ரஜினி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும் விதிமீறி வைக்கப்பட்ட பேனர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி அவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
பேனர்கள் அனைத்தும் விதிமீறி வைக்கப்படவில்லை என்றும், சிலர் தாமாகவே முன்வந்து அகற்றியதாகவும் அரசு பதிலளித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, சட்டவிரோத பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் கட்சியில் சேர்ந்துவிடுங்கள் என்று கூறினர். அதுகுறித்த விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, இன்றைய விசாரணையின் போது சட்ட விரோத பேனர்கள் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஒரே அளவுகோலை பின்பற்றுகின்றன. நீதிமன்ற உத்தரவுகளை அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் மதிப்பது கிடையாது. செயல்படுத்துவதும் கிடையாது. சாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகள், அமைப்புகள் யாரும் பேனர் வைக்கக்கூடாது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படும் என தமிழக அரசு உறுதிமொழி அளிக்க வேண்டும் என தெரிவித்தது.
மேலும், இது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை விதித்ததுடன் இது குறித்த விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.