கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.
ஆனால் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் இதயம் திடீரென்று செயல் இழந்ததாகவும், இதனால் அவர் மரணம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று கூறியதெல்லாம் பொய். அமைச்சர்களாகிய நாங்கள் பொய்கூறியதற்கு மன்னித்துவிடுங்கள் என்றார்.
இந்நிலையில் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை அணிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியல் அனைத்தும் விளையாட்டாகிவிட்டது. நீதி விசாரணை தேவை ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார் என்று கூறிய அனைத்து அமைச்சர்கள் மீதும் நீதி விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் தினகரன் வெளியிட வேண்டியதுதானே என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.