மகாவீரர் பிறந்த தினத்தில் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராகிய பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
“அகிம்சையே தர்மமாகும், எந்த ஜீவனையும் கொல்லாதே, எவரையும் சார்ந்திராதே, எவரையும் அடிமைப்படுத்தாதே” என்பதே பகவான் மகாவீரர் அறிவுறுத்திய சமத்துவக் கொள்கையாகும். மனித வாழ்வு மேன்மையுற, பகவான் மகாவீரர் போதித்த அகிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல் போன்ற உயரிய நெறிகளை மக்கள் கடைப்பிடித்து வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி அன்பு செழித்தோங்கும்.
இந்த இனிய நாளில், பகவான் மகாவீரரின் உயரிய போதனைகளை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி அன்பும், அறமும் நிறைந்த மகிழ்வான வாழ்வை வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.