சட்டப்பேரவையில் ஆளுநரை வெளுத்து வாங்கிய முக ஸ்டாலின் - முழு விவரம்!

இன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மூலம் சட்டபேரவை கூட்டத்தில் இரண்டாவது முறையாக ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.    

Written by - RK Spark | Last Updated : Apr 10, 2023, 12:30 PM IST
  • அரசு எடுத்த கொள்கை முடிவுக்கு எதிராக பேசுகிறார்
  • தமிழ்நாட்டு சட்டமன்றத்தை அவமதிக்கிறார்
  • ராஜ் பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார் - முதல்வர்.
சட்டப்பேரவையில் ஆளுநரை வெளுத்து வாங்கிய முக ஸ்டாலின் - முழு விவரம்! title=

ஆளுநர் ஆர்என் ரவி தொடர்பாக சட்டபேரவையில் தீர்மானத்தை இன்று துரைமுருகன் கொண்டு வந்தார்.  பேரவையின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு எண்ணி கழிக்கும் முறையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பு முறையில் 4ல் 3 பங்கு உறுப்பினர்கள் எண்ணிக்கையில் வாக்கு எண்ணிக்கை அவசியம்.  தமிழக சட்டபேரவையில் பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெற்றது.  பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை சட்டமியற்றும் அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசு வழங்க வேண்டும், பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் வழங்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஓட்டெடுப்பின் பொது பேரவையில் அனைத்து கதவுகளையும் மூட சபாநாயகர் உத்தரவிட்டார்.  அதிமுக ஏற்கனவே அவையை விட்டு வெளியேறியதால், பாஜக எம்எல்ஏகள் வெளியேற அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மனுத்து விட்டார், கதவுகள் மூடப்பட்டு விட்டதால் இனி வெளியேற முடியாது என சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.  ஆளுநருக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏகள் எம்ஆர் காந்தி, சிகே சரஸ்வதி இருவரும் எதிர்த்து வாக்களித்தனர், நயினார் நாகேந்திரன், வானதி அவையில் இல்லை.  இந்த வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 2 பேர் எதிர்த்து வாக்களித்து உள்ளனர்.  இந்த தீர்மானத்தின் மூலம் சட்டபேரவை கூட்டத்தில் இரண்டாவது முறையாக ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.  

மேலும் படிக்க | 'வெற்றி பெற்றால் தான் அரசியல்வாதி' மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பரபரப்பு பேச்சு

தொடர்ந்து பேசிய முக ஸ்டாலின், "ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்தில் செயல்படுகிறார், ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை என்ற போதிலும் மரியாதை அளிக்க தவறியதில்லை.  தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டு அரசிற்கும் நண்பாக இருக்க ஆளுநர் தயாராக இல்லை.  மக்களுக்கு வழிகாட்டும் நண்பராக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.  ஆளுநர் என்ற நிலை மாறி அரசியல்வாதியாக பேசுகிறார்.  சட்டமன்றத்தில் அரசியல் நோக்கத்திற்காக இடைஞ்சல் கொடுத்தால் அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது, ஆளுநருக்கு கருத்து பதில் சொல்லி அரசியல் மன்றமாக சட்டமன்றத்தை நான் மாற்ற விரும்பவில்லை.  

ஒன்றிய அரசு- மாநில அரசு உறவுகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா, “ஆளுநர் என்பவர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக” (Governor should be a Detached figure) இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.  இதே கருத்தை அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய பிரதமராக இருந்து வாஜ்பாய் அவர்கள் 2000-ஆம் ஆண்டு நியமித்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா அறிக்கையும் இதையே வலியுறுத்தியது.  அரசியல் சட்டத்தின் தந்தை என நாம் அனைவராலும் போற்றப்படும் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், “ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல் சட்ட ஆளுநராக செயல்பட வேண்டும்” (Governor Should be a constitutional Governor with no power of interference in the administration of province” என்பதை அரசியல் நிர்ணய சபையிலேயே வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் படிக்க | ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்... 'சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே சரி' - இப்போது என்ன பிரச்னை?

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நியமித்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்தலைமை நீதிபதி தலைமையிலான “ராஜமன்னார்குழு” ஒன்றிய அரசு- மாநில அரசு உறவுகள் பற்றி அளித்த அறிக்கையில்- “ஆளுநர் பதவியை ஒழிக்க மிக உகந்த தருணம் இது” என்று  பரிந்துரைத்து. இதே மாபெரும் மன்றத்தில் அந்த அறிக்கை மற்றும் பரிந்துரைகள் 5 நாட்கள் விவாதிக்கப்பட்டு- மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது வரலாறு.  2010-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, “ஆளுநர் நியமிக்கப்பட்டு விட்டால் அவர் அரசியல் சட்டத்திற்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிக்கு அல்ல” (Once appointed as Governor they owe allegiance to the Constitution and not to any political party) என்று “பி.பி. சிங்கால்” வழக்கில் மிகத் தெளிவாகவே வரையறுத்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் இருக்க வேண்டும்” (Governor should be a guide, philosopher and friend of the Ministry as well as the people in General” என்று எத்தனையோ உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் நமது ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு- தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக ஆக இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதிலிருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகிறது.  ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல.

மேலும் படிக்க | 'வெற்றி பெற்றால் தான் அரசியல்வாதி' மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பரபரப்பு பேச்சு

இந்த அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை இந்த சட்டமன்றத்தின் இறையாண்மையை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களை பொது வெளியில் பேசுகிறார். அவர் ஆளுநர் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாகப் பேசுகிறார். அந்தப் பதவிக்கு என்னென்ன தகுதிகளை சர்க்காரியா அறிக்கை வரையறுத்து கூறியுள்ளதோ அந்த தகுதிகளை எல்லாம் மறந்து விட்டுப் பேசுகிறார். அதுவும் குறிப்பாக பிரதமர் தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும் போதோ தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை இந்த அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் இளைஞர்கள் தற்கொலைகள் தொடரும் நிலையில் கூட அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். அதற்கு மேல் சென்று- “withhold” என்றால் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று ஆளுநர் பேசுகிறார்.
இந்த “Withhold” அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கவே கூடாது என்று சர்க்காரியா அறிக்கை கூறியதைக் கூட அறியாதவர் போல் பேசுகிறார். அரசியல் சட்டப் பிரிவு 200-ன் கீழ் “ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை சட்டமன்றம் மீண்டும்  நிறைவேற்றி அனுப்பிவிட்டால்- அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதை விட வேறு வழி ஆளுநருக்கு இல்லை” என்பதே தெளிவு.  

அரசியல் சட்டம் ஆளுநருக்கு தெரியவில்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய “அரசியல் சட்ட விசுவாசத்தை “அரசியல் விசுவாசம்” அப்படியே விழுங்கி விட்டது என்றே இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.  அதனால்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவுகளை பொது வெளியில் பேசுகிறார்.  அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள “மதசார்பின்மைக்கு” எதிராகப் பேசுகிறார்.  தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார்.  தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு குறுக்கே நிற்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத் தடை என்பது ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. மக்கள் கருத்து - வல்லுநர்கள் கருத்து- சட்டங்கள் - தீர்ப்புகள் / மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் கருத்துகள் இவை அனைத்தும் சேர்ந்து தான் உருவாக்குகிறோம்.  இப்படிப் பார்த்துப்பார்த்து உருவாக்கிய சட்டத்தை தன்னுடைய சுயவிருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு காரணம் சொன்னால் இதனை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு ஏமாந்தவர்கள் இருக்கும் மாநிலம் அல்ல" என்று முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.

மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை போடும் கணக்கு: வாய்ப்பில்லை என சொன்ன செல்லூர் ராஜூ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News