காங்கிரஸுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைக்கும் என பரவி வரந்த தகவல்களுக்கு கமல் மறுப்பு தெரிவித்துள்ளார்!
பாராளுமன்றத் தேர்தல் வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைக்கும் என தகவல்கள் பரவிவருகின்றன. இந்த தகவல்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் இன்று பதில் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது..
"ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பது இப்போது முடிவு எடுக்கமுடியாத ஒரு விஷயம்.
சபரிமலை விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் மதிக்கவில்லை. நான் ஐயப்பன் கோயிலுக்கு சென்றது இல்லை. எனவே இந்த விவகாரத்தில் நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. பக்தர்களின் நிலை பற்றி தெரியாத நிலையில் நடுவில் இருந்து கொண்டு பெண்களுக்கு ஆதரவாக பதில் கூறுவேன். எனவே இந்த விவகாரத்தில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
துரைமுருகன் நடிப்பு எனக்கு பிடிக்காது, ஆளும் கட்சியினர் பதற்றம் காரணமாக என்னை விமர்சனம் செய்கின்றனர்.
லோக்சபா தேர்தலில், போட்டியிடுவது குறித்து கட்சியினருடன் பேசி முடிவு செய்யப்படும்" என தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பதாக ராகுலிடம் கமல்ஹாசன் தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் திருநாவுக்கரசர் தெரிவித்து இருந்தார். இந்த தகவலினால், தமிழகத்தில் திமுக-காங்கிரஸ்-மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமையும் என பரபரப்பு தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த வதந்திகளுக்கு கமல்ஹாசன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்!