சென்னை: நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் கடும் முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசிடம் உள்ள இருப்பில் இருந்து வெங்காயத்தை தேவையான மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். சிலர் வெங்காயத்தை பயன்படுத்துவதையும் நிறுத்தி விட்டனர். தமிழகத்தை பொறுத்த வரை சில பகுதிகளில் 60 ரூபாய், 50 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படுகிறது. வெங்காயத்தின் தேவையை அறிந்து மற்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து அடுத்த 3 நாட்களுக்குள் தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடந்த 23 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தமிழக கூட்டுறவு அங்காடிகளில் ரூ.33-க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் மொத்த வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆகியவைதான் மிக முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் அங்கு தொடர்ந்து பெய்த மழை, அதனால் ஏற்ப்பட்ட வெள்ளம் பெருக்கமும் வெங்காயத்தின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
ஆனாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைத்துக்கொள்ள மத்திய அரசு, மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மேற்க்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் கீழ் இருக்கும் நாஃபெட் கூட்டுறவு அங்காடிகள் மூலம் தன் இருப்பில் இருக்கும் வெங்காயத்தை மற்ற மாநிலங்களுக்கு குறைந்த விலையில் அனுப்பி வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டுவர நாசிக் மற்றும் ஆந்தரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்திருந்தது. தற்போது ஆந்தராவில் இருந்து தமிழகத்திற்கு வெங்காயம் வருகிறது. அந்த வெங்காயத்தை தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகள் மூலம் 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை குறைக்க தமிழக அரசு தொடர்ந்து அதற்க்கான பணிகள் ஈடுபட்டு வருகிறது எனவும் கூறினார்.