69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: PMK

69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்!!

Last Updated : Feb 22, 2019, 02:41 PM IST
69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: PMK title=

உச்சநீதிமன்றம் வினா: 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்!!

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு என்ற சமூகநீதி தத்துவத்தின் மேல் கத்தி ஒன்று தொங்கிக் கொண்டே இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட நாட்களாக தெரிவித்து வந்த அச்சம் இப்போது உறுதியாகி உள்ளது. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று எழுப்பிய இரு வினாக்கள் தான் தமிழகத்தில் சமூகநீதி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட  வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கு குறித்த விவரங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், ‘‘இட ஒதுக்கீட்டுக்கு 50% உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 69% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவது ஏன்? தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவு 69% என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?’’ என்று வினாக்களை எழுப்பியுள்ளனர். இந்த வினாக்களுக்கான விளக்கங்களை மார்ச் 14-ஆம் தேதிக்குள் அளிக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த வினாக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிலான விளக்கத்தை தமிழக அரசு எவ்வாறு வழங்கப் போகிறது? என்பது தான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள எதிர்பார்ப்பாகும். இட ஒதுக்கீடு என்பது மக்கள் தொகை அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் கல்வி மற்றும் சமூக நிலையைக் கருத்தில் கொண்டும் தான் தீர்மானிக்கப்படுகிறது. தமிழகத்தில் 69 விழுக்காடு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால், அந்த மாநிலத்தில் இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்களின்  எண்ணிக்கை 69 விழுக்காட்டை விட அதிகமாக இருக்கிறது என்று பொருளாகும். இதை உறுதி செய்யக்கூடிய புள்ளி விவரங்களின் உதவியுடன் நிரூபிப்பதன் மூலம் 69% ஒதுக்கீட்டைக் காக்க முடியும். அத்தகைய புள்ளி விவரங்களைத் திரட்டுவதற்கான ஒரே வழி தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தான். இதை நான் பலமுறை ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டதைப் போன்று தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை சிதைக்க வேண்டும் என்று பல சக்திகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த சக்திகள் தான் தான் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. ஏற்கனவே, 25 ஆண்டுகளுக்கு முன் தொடரப் பட்ட இதேபோன்ற வழக்கு கடந்த 2010-ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா, ‘‘ தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை தீர்மானிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தார்.

ஆனால், அப்போதிருந்த திமுக அரசிடம் பலமுறை நானே முறையிட்டும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆட்சியாளர்கள் மறுத்து விட்டனர். உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை நியாயப்படுத்தாததால் தான் 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் மார்ச் மாதம் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. அப்போது ‘‘தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவு 69% என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?’’ என்ற வினாவுக்கு தமிழக அரசின் சார்பில் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கத்தை அளித்தால் மட்டும் தான் 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும். ஆனால், தமிழக அரசிடம் இப்போது உள்ள புள்ளிவிவரம் என்பது 1931-ஆம் ஆண்டு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியானது ஆகும். அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா? என்பது தெரியவில்லை. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி ஜனார்த்தனம் அளித்த தவறான வழிகாட்டுதல்கள் தான்  69 விழுக்காடு இடஒதுக்கீட்டு விவகாரத்தில் இந்த அளவுக்கு குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாகும்.

உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய அறிவுரையின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதன் மூலமாக மட்டுமே  69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும். எனவே, தமிழ்நாட்டில் சமூக நீதியைப் பாதுகாப்பதற்காக சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

Trending News