முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைக்கும், தமிழக அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அவர், சென்னை செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது;
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்ட நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது. வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைக்கும், தமிழக அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை, வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது வருமான வரித் துறை சோதனை நடத்துவது வழக்கமானதுதான். அந்த அடிப்படையில் போயஸ் தோட்டத்தில் சோதனை நடந்துள்ளது.
இதற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். வருமான வரித் துறை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, வரி ஏய்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சோதனை நடத்தப்படும். அதன் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் சோதனை நடந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற உத்தரவைப் பெற்று போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் இல்லத்தில் சோதனையிட்டுள்ளனர். சிலர் செய்த தவறு காரணமாக நடந்த இந்தச் சோதனை, அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் மனவேதனையை ஏற்படுத்தியதோடு, கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கோயிலாகக் கருதுகிறோம். ஆகவே, அவரது இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிமுகவுடன் தினகரனுக்கு தொடர்பில்லை: வருமான வரி சோதனைக்கு தமிழக முதல்வரும், துணை முதல்வரும்தான் காரணம் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாரே எனக் கேட்கிறீர்கள்.
டி.டி.வி. தினகரன் கூறுவதை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன. அவர் 10 ஆண்டுகள் கட்சியிலேயே கிடையாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் கட்சிக்கே வருகிறார். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் அப்படியல்ல, 1974-இல் இருந்து நான் அதிமுகவில் இருக்கிறேன். பல்வேறு சோதனைக் காலத்திலும் 43 ஆண்டு காலம் கட்சிக்கு விசுவாசமாக இருந்த காரணத்தால்தான், இந்தப் பதவிக்கு உயர்ந்துள்ளேன்.
தினகரன் கட்சிக்காக என்ன தியாகம் செய்தார். கட்சிக்காக உழைப்பவர்கள் யார், விசுவாசமானவர்கள் யார் என்பது மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் தெரியும்.
கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு பல பதவிகளை அளித்தார். அதேபோல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தான் என்னை முதல்வராகத் தேர்வு செய்துள்ளனர். யாருடைய தயவிலும் நான் முதல்வர் பதவிக்கு வரவில்லை. டிடிவி தினகரன் தரப்பினர்தான் தேர்வு செய்தார்கள் என்றால், இப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவர்களது பக்கம் இருந்திருக்க வேண்டுமே? ஆர்.கே.நகர் தேர்தலின்போது அவரே (டி.டி.வி.தினகரன்) தன்னை வேட்பாளர் என அறிவித்துக் கொண்டார்.
அப்போது கட்சி இருந்த சூழ்நிலையில், பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதால் தான் அனைவரும் அமைதியாக இருந்தோம். தமிழக அரசின் திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆய்வு செய்தார் என்று கூறுவதே தவறு. கோவையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற அவர், அரசு செயல்படுத்தும் திட்டங்களை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார். திட்டமிட்ட ஆய்வுக் கூட்டம் அல்ல; பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றபோது திட்டங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார். அரசின் திட்டங்களையும் பாராட்டியிருக்கிறார்.
ஆனால், இந்த விஷயத்தில் எதிர்க் கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு குற்றஞ்சாட்டுகின்து என்றார்.