தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியீடு..!
தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்துக்கும் 20% கொரோனா வரி விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காரணமாாக பல மாநிலங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் நாடு முழுவதிலும் சில மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் நேரக்கட்டுப்பாடு மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மது கடைகள் திறக்கப்பட்டன. இதனிடையே புதுச்சேரியில் மது கடைகள் திறப்பதற்கு அனுமதி தரப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். அதற்கு முன்னதாக மதுபானங்கள் மீது கரோனா வரி விதிக்க புதுச்சேரி அரசு ஒப்புக்கொண்டதால் ஆளுநர் கிரண்பேடி மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கினார்.
கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டைவிட புதுச்சேரியில் மதுபானங்களின் விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த குடிமகன்கள் புதுச்சேரிக்கு வருவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் கேரளாவில் உள்ள மஹே மற்றும் ஆந்திரபிரதேசத்தில் உள்ள யானம் – ஆகிய இரு இடங்களில் மது கடைகள் திறக்கப்படுமா என்பது குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து சரியான தகவல் கிடைக்கவில்லை.