முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக ஒரு வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோ 2.43 நிமிடங்கள் ஓடக்கூடியது ஆகும்.
வீடியோவில் வீட்டின் அறையில் அமர்ந்துள்ள 10 மாதங்களே ஆன குழந்தையின் முன் இரு மது பாட்டில்களை அதன் தந்தை வைக்கிறார். பின்னர் பீர் பாட்டிலை குழந்தையின் வாயில் வைக்கிறார். அப்போது அந்த பாட்டிலின் மூடி திறக்கப்படவில்லை. இதையறிந்த தந்தை மூடியை அகற்றி விட்டு பீர் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்து மதுவை புகட்டுகிறார்.
அடுத்த காட்சியில் குழந்தையின் தலையை பீர் பாட்டிலை நோக்கி சாய்த்து மதுவைக் குடிக்கும்படி கட்டாயப் படுத்துகிறார். ஒரு கட்டத்தில் அவரும் பீரை குடித்துக் கொண்டே, "அப்பா எப்படி குடிக்கிறேன் பாரு" என்று கூறுகிறார். பின்னர் மீண்டும் குழந்தையின் வாயில் பீர் பாட்டிலை வைத்து மது புகட்டுகிறார்.
குழந்தை தடுமாறிக்கொண்டே மது குடிக்க முயல்வதை பார்த்து அதன் தந்தையும், அக்காட்சியை செல்பேசி வீடியோவில் படம் பிடிக்கும் குழந்தையின் தாயும் சிரிக்கின்றனர்.
இந்தக் காட்சியைப் பார்க்கும் போது தமிழகம் எங்கே போகிறது? என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. பெரியவர்கள் மது குடிப்பதே தவறு என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், 10 மாதக் குழந்தைக்கு, குற்ற உணர்வே இல்லாமல், அதன் தந்தையே மது புகட்டுவதும், அதை அக்குழந்தையின் தாயாரே வீடியோ எடுத்து வெளியிடுவதும் நினைத்துப் பார்க்க முடியாத சீரழிவுகள் ஆகும். இத்தகைய செயல்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தமிழகத் தலைநகரான சென்னையில் தான் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரியவந்திருக்கிறது.