சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி(25). செங்கல்பட்டு அருகேயுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவர் ரெயில் நிலையம் வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.
இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அதில், ரெயில்வே போலீசாரும், சென்னை மாநகர போலீ சாருக்கும் இந்த வழக்கின் புலன் விசாரணை செய்வதில் ஒருங்கிணைப்பு இல்லை. இதனால், குற்றவாளிகளை பிடிக்க ரெயில்வே போலீசாரால் முடியவில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்த செய்தியை படித்து பார்த்த ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.நாகமுத்து, நீதிபதி வி.பாரதிதாசன் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த 2 நீதிபதிகளும் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க கோர்ட்டு அறைக்கு வந்தனர். வழக்குகளை விசாரிப்பதற்கு முன்பு மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் சண்முகவேலாயுதத்தை கோர்ட்டுக்கு வரும்படி அழைத்தனர். அவர் வந்தபின்னர், போலீசாரின் செயல்பாடுகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர். சுவாதி கொலை வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது என்ற விவரங்களை இன்று மதியம் 3 மணிக்கு இந்த ஐகோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கு சென்னை நுங்கம்பாக்கம் காவல் துறை போலீசாருக்கு மாற்றபட்டது.