கடந்த மே 29 ஆம் நாள் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை ஜூலை 9 ஆம் நாள் வரை நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழக சட்டப்பேரவை வரும் சனவரி மாதம் முதல் வாரத்தில் கூட்டப்படும் என தகவல்கள் வந்துள்ளது.
ஒரு சட்டப்பேரவை கூட்டத்தை முடித்த பிறகு, அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தை ஆறு மாதத்திற்குள் கூட்ட வேண்டும் என்பது விதி. இந்த விதியின் அடிப்படையில் அடுத்த தமிழக சட்டப்பேரவையின் 5_வது கூட்டத்தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கூடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவையின் 5_வது கூட்டத்தொடரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைப்பார். அடுத்த ஐந்து நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி "ராமசாமி படையாட்சியார் உருவப்படம் சட்டப் பேரவையில் திறக்கப்படும்" என அறிவித்திருந்தார். இதனால் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் "ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கப்படும்" எனத் தெரிகிறது.
தமிழக வரலாற்றில் மறக்க முடியாத தலைவர்களில் ஒருவரான மறைந்த, மூத்த திமுக தலைவரான மு.கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பை அடுத்து அந்த 18 பேரின் தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.