சென்னை: தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் சேதம் மிகவும் அதிகமாக உள்ளது. சுமார் 6000 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவிற்கு கடிதம் எழுதி, தனது வருத்தத்தை தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி. இயற்கையின் சீற்றங்களால் மாநிலத்தின் நிலைமை சீர்கெட்டிருப்பது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்கள் சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தெலுங்கானா அரசுக்கு 10 கோடி ரூபாய் நிவராண நிதியை வழங்குவதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரின் ஆறுதலை ஏற்றுக் கொண்ட தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அவர் அறிவித்த நிவாரண உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
துயர் துடைக்க நிதி பங்களிப்பைத் தவிர, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தமிழக அரசு அனுப்பி வருகிறது.
தெலுங்கானா அரசுக்குத் தேவையான வேறு எந்த உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் உறுதியளித்தார்
கடந்த சில நாட்களாக ஹைதராபாத் நகரம் மற்றும் தெலுங்கானாவின் வேறு சில மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்யும் மழை மக்களின் வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு தெலுங்கானா மாநிலத்தின் பல இடங்களில் கனமழை முதல் அடைமழை வரை பெய்யலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளில் மழை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை ஐம்பது பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஹைதராபாத் நகரில், பல காலனிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மாநிலத்தில் சுமார் 6000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத் நகரின் அங்கீகாரமற்ற இடங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காலனிகள் உள்ள சில பகுதிகளில் வெள்ளம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களை வெளியேற்ற இராணுவம் மற்றும் தேசிய பேரிடர் நிவாரணப் பணியாளர்களும் அல்லும் பகலும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR