பேரிடர் மீட்பு குழுவின் வழிமுறைப்படியே சுஜித்-ன் உடல் மீட்கப்பட்டது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித், கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. அருகில் ஒரு மீட்டர் விட்ட ஆழ்துளையிட்டு காப்பாற்றும் முயற்சியும், கடினமான பாறைகள் இருந்ததால் தாமதப்பட்டது. சுமார் 80 மணி நேர போராட்டத்திற்குப் பின் சுஜித், சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியது.
இந்தநிலையில், ஆள்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சுஜித் சடலத்தை காட்சிப்படுத்தாதது ஏன் என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்; போர்வெல் என்பது விபத்துதான், பேரிடர் அல்ல, சுஜித்தை மீட்க முடியாதது துரதிருஷ்டவசமானது. சுஜித்தைக் காப்பாற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகவும் ஆனால் முடிவு எதிர்மறையாக கிடைத்து விட்டதாகவும் கூறினார்.
மேலும், பேரிடர் மீட்பு குழுவின் வழிமுறைப்படியே குழந்தை சுஜித் உடல் மீட்கப்பட்டது. மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் முடியுமோ அந்த அனைத்து வழிகளிலும் சுஜித்தை மீட்க முயன்றோம். சுஜித்தின் உடலை காட்சிப்படுத்தாதது தொடர்பான சர்ச்சைக்கு பதில் அளித்த அவர், சடலத்தை மீட்பது குறித்த மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படியே செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.