செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் ஏற்கனவே இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. நீதிபதி நிஷா பானு செந்தில் பாலாஜி கைது செல்லாது என்றும், நீதிபதி பரத சக்கரவர்த்தி அமலாக்கத்துறையின் கைது செல்லும் என்றும் தீர்ப்பளித்தார். இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, பிற்பகலில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். அதில், செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்த கருத்துகளை சுட்டிக் காட்டினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியே அமலாக்கத்துறை ஜூன் 13 ஆம் தேதி செந்தில்பாலாஜியிடம் சோதனை நடத்தியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரு தரப்பினராலும் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்சுக்கு தெரிவிக்கப்படவே இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நான் ஆராயவில்லை என்றால் நான் என் கடமை தவறியவனாகிவிடுவேன். ஏன் என்றால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தது என்று நீதிபதி கார்த்திகேயன் குறிப்பிட்டார். மேலும், தனது தீர்ப்பில் அமலாக்கத் துறை விதிகளை சுட்டிக்காட்டிய நீதிபதி, செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது அவசியம். அவரை அமலாக்கத் துறை காவலில் அனுப்பியது செல்லும். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கப்படுகிறது என தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை பொறுத்தவரையில் நீதிபதி பரத சக்ரவர்த்தி கூறிய காரணங்களோடு நான் உடன்படுகிறேன் என்று குறிப்பிட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்டவர் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ததற்கு முன்னோடி குற்றமாக கருதப்படும், போக்குவரத்து கழக வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்தவர்களை பறறி இங்கே ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. ஒரு எழுத்து கூட எழுதப்படவில்லை. இதை நான் இங்கே மிக வேதனையோடு சுட்டிக்காட்டியாக வேண்டும். அவர்களின் துயரங்களை இந்த நீதிமன்றம் மறக்கவில்லை. ஒருவேளை அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் சமரசமாக விரும்பி சென்றிருந்தால் கூட அவர்கள் தங்கள் வீட்டு பெண்களின் வளையல்களை விற்று அல்லது வீட்டையே அடமானம் வைத்து பணம் கொடுத்திருப்பார்கள் என்பதை மறந்துவிட முடியாது என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில் அமலாக்கத் துறை ஒருவரை கைது செய்ய வேண்டுமென்றால் போதிய பொருட்டான ஆதாரம் அவர்களிடம் இருக்க வேண்டும், கைது செய்யப்படும் நபர் தப்பி ஓடுவதை தடுப்பதற்காக மட்டுமே அவரை கைது செய்ய முடியும், செந்தில் பாலாஜியை கஸ்டடி கேட்க முடியாது என்று வாதிடப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி கார்த்திகேயன், கபில் சிபில் வாதத்தில் சிறு தவறு உள்ளது என்று தெரிவித்தார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் 5ஆவது அத்தியாயம் சம்மன், சோதனை, கைப்பற்றுதல்கள் பற்றி விளக்குகிறது. அதில், அமலாக்கத் துறை அதிகாரிகள் எந்த இடத்துக்கும் சென்று எந்த நபரையும் சோதனையிட்டு அவர்களிடம் இருக்கும் பதிவுகளை ஆய்வு செய்வதற்கும், குற்றம் நடந்ததை பற்றி சரிபார்ப்பதற்கும் அல்லது அவர்களது பரிவர்த்தனை பற்றி ஆராய்வதற்கும் அனுமதி அளிக்கிறது. இந்த தகவல் சட்டப்பிரிவு 16ல் உள்ளது. கைதுக்கான காரணமான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்தது சட்டப்பிரிவு 17 என்பது தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் தொடர்பானது. சொத்துக்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றலாம். கைப்பற்றப்பட்ட தகவலையும் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்று சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17 கூறுகிறது என்று சுட்டிக்காட்டி, அவர் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் படிக்க | மணிப்பூரில் சட்ட ஒழுங்கை காப்பாற்றிவிட்டு, தமிழகம் குறித்து பேசுங்கள் - ஆ. ராசா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ