மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை எப்போதும் வரவேற்பதாகவும், வீதி வீதியாகச் சென்று மக்களின் ஆதரவை திரட்ட உள்ளதாகவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுக.,வில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
என்னுடைய அரசியல் வாழ்க்கையில் தவறு செய்ததாக ஒருபோதும் பெயர் வாங்கியதில்லை. காலம்தான் உரிய பதில் சொல்லும். சட்டசபை கூடியபிறகு எனக்கு உள்ள ஆதரவை எம்.எல்.ஏக்கள் நிரூபிப்பார்கள். அதிமுக கொள்கை கோட்பாட்டை மீறி செயல்பட்டது இல்லை. அதிமுகவுக்கு எப்போதும் துரோகம் செய்யவில்லை. என்னை அதிமுக.,வில் இருந்து நீக்கியதைப் பற்றி வருத்தம் இல்லை.
நான் தமிழக மக்களை சந்தித்து, ஆதரவு திரட்ட உள்ளேன். தமிழகத்தின் ஒவ்வொரு ஊராகச் சென்று, வீதி வீதியாக மக்களை சந்தித்து, ஆதரவு திரட்டுவேன். ஜெயலலிதா கை காட்டிய முதல்வர் நான் மட்டுமே. அதனை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு எப்போதுமே மரியாதை அளித்து வருகிறேன். தேவைப்பட்டால், அவர் என்னோடு இணைந்து செயல்படலாம். அவரை நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.