Famous Actress Bhanumathi Unknown Facts: நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்ட பி.பானுமதி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து பார்ப்போம்.
இனிமையான குரல், அபாரமான இசை ஆர்வம்
ஆந்திர பிரதேசத்தில் ஒங்கோலில் பொம்மராஜு வெங்கட சுப்பையா கர்நாடக இசை பயின்றவர். அவரது மனைவிக்கும் இசையில் ஆர்வம் உண்டு. அந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு பெண்கள். அவர்களுள் மூத்த பெண்ணுக்கு இயற்கையாகவே மிகவும் இனிமையான குரல் மற்றும் அபாரமான இசை ஆர்வம் கொண்டிருந்தாள். சிறுவயதிலேயே பிரமாதமாக பாடுகிறாளே.. இசை உலகில் பெரிய ஸ்தானத்தைப் பெறுவாள் என்று பலர் அப்போதே ஆருடம் கூறினார்கள்.
பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட பானுமதி
ஒருமுறை ஒரு பாட்டைக் கேட்டால் அச்சரப் பிசையின்றி அப்படியே பாடக்கூடிய பேராற்றலை இறைவன் அந்தப் பெண்ணுக்கு வழங்கியிருந்தான். அவளை பெரிய பாடகையாக்க ஆசைப்பட்ட தந்தை முறையான சங்கீத பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். அந்தப் பெண்தான் பிற்காலத்தில் இனிமையான குரல் கொண்ட இசை பாடகி என்று பலரால் பாராட்டப்பட்ட வரும் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களால் 'நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை' என்று போற்றப்பட்டவருமான பானுமதி ராமகிருஷ்ணா.
நடிகை பானுமதி நடித்த முதல் படம்
நல்ல பாடகி என்று இளம் வயத்திலேயே பாராட்டைப் பெற்ற பானுமதியின் வாழ்க்கையில் 1939 இல் ஒரு திருப்பம் ஏற்பட்டது. பிரபல டைரக்டர் பி. புள்ளையா அப்போது 'வர விக்ரயம்' என்ற படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார். பானுமதியை அந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகி ஆக்க அவர் விரும்பி, தந்தை வெங்கட சுப்பையாவின் அனுமதியை பெற்றுவிட்டார். 13 வயது பானுமதி அந்தப் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்தார். படமும் நன்றாக ஓடியது.
ராமகிருஷ்ணாவுக்கும் பானுமதிக்கும் காதல்
இதைத் தொடர்ந்து மாலதி மாதவன், தர்மபத்தினி, பக்திமாலா, கிருஷ்ண பிரேமா போன்ற படங்களிலும் நடித்தார். கிருஷ்ண பிரேமா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராமகிருஷ்ணாவுக்கும் பானுமதிக்கும் காதல் ஏற்பட்டது.
நடிகை பானுமதியின் திருமணம்
தந்தையின் ஆசியுடன் காதலர் திருமணம் புரிந்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று மனைவி பானுமதியிடம் கணவர் ராமகிருஷ்ணா சொன்னார். ஆனால் விதியின் முடிவு வேறு விதமாக இருந்தது. அப்போது சினிமாவில் பிரபலமாக விளங்கிய பி.என்.ரெட்டி 'சொர்க்க சீமா' என்ற திரைப்படத்தை எடுக்க முடிவு செய்திருந்தார். பானுமதியை கதாநாயகியாக நடிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார். முதலில் தயங்கினாலும் முடிவில் ஒப்புக்கொண்டனர்.
சொர்க்க சீமா அமோக வெற்றி
1945 பானுமதி நடித்த 'சொர்க்க சீமா' பெரிய வெற்றியைப் பெற்றது அதில் பானுமதி பாடிய 'ஓ பாவுரமா' என்ற பாட்டு சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தின் கேரக்டருக்கு பானுமதி நன்றாக பொருந்தியதால் படமும் வெற்றி பெற்றது. அவருக்கு பேரும் புகழ் கிடைத்தது. சொர்க்க சீமா தமிழிலும் வெளிவந்தது. இங்கும் இமாலய வெற்றி பெற்றது. தமிழிலும் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பானுமதியை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தங்கள் படத்தில் அவரை நடிக்க வைத்து விட வேண்டும் என சுற்றி சுற்றி வந்தார்கள். தங்களது படங்களில் நடிக்கும்படி வலியுறுத்தினார்கள்.
நடிகை பானுமதி குழந்தை பிறந்தது
ஆனால் நடிகை பானுமதி சிலவற்றில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தார். பானுமதிக்கு ஒரு மகன் பிறந்தான். பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால் பரணி என்றே பெயர் சூட்டினார்கள். மகன் பெயரில் பரணி பிக்சர்ஸ் என்ற கம்பெனியை தொடங்கினார் பானுமதி.
சொந்தமாக படம் தயாரித்த நடிகை பானுமதி
ராமகிருஷ்ணாவும், தியாகராஜ பாகவதர் சிறையிலிருந்து விடுதலையானவுடன் 1948 ஆம் ஆண்டு ராஜமுக்தி என்ற திரைப்படத்தை சொந்தத்தில் தயாரித்தார். இதில் நடித்த பானுமதி பாகவதர் உடனும், தனித்தும் இரண்டு பாடல்களை பாடினார். இசை சிஆர் சுப்புராமன் படம் தோல்வியுற்றதால் அதன் இசையும் எடுபடவில்லை.
அடுத்து பி. சின்னப்பாவுடன் 'ரத்னகுமார்' என்ற படத்தில் நடித்தார் பானுமதி. இசை ஜி . ராமநாதன், சிஆர் சுப்பராமன். படத்தில் 15 பாடல்கள். ஆனால் படம் சரியாக போகவில்லை.
பானுமதிக்கு பெரும் புகழ் தந்த படங்கள்
இந்த காலகட்டத்தில் பானுமதிக்கு பெரும் புகழ் தந்த படங்கள் கலைவாணர் என்.எஸ்.கே நடித்த 'நல்ல தம்பி' மற்றும் ஜெமினியின் 'அபூர்வ சகோதரர்கள்'.
நல்ல தம்பி படத்துக்கு சி.ஆர். சுப்பராமன் இசையமைத்தார். அதில் பானுமதி லத்தின் அமெரிக்கா இசை பாணியில் பாடலை பாடினார். அந்நிய இசை பாணியில் பாடிய முதல் பாடகியும் பானுமதி தான். நல்ல தம்பி படத்தின் கதை, வசனம் அறிஞர் அண்ணாவுடையது. இந்த படத்தில் கலைவாணரின் சீர்திருத்த காமெடிக்கு சரிசமமாகவே ஆணவம் பிடித்த பணக்காரியாக நடிப்பில் ஜொலித்தார் பானுமதி.
ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எம்.கே ராதாவுக்கு ஜோடியாக நடித்த பானுமதி 'லட்டு லட்டு மிட்டாய் வேணுமா' என்று காமெடி பாட்டை இனிமையான குரலில் பாடி வில்லன்களிடம் இருந்து தப்பிக்கும் காட்சியில் அவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய எல்லா மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் இசை அமைப்பாளர்கள் ராஜேஸ்வரராவ், என்.டி பார்த்தசாரதி, ஆர். வைத்தியநாதன் என மூன்று பேர் ஆவார்கள்.
பானுமதி பாடல் பாடிய படங்கள்
பானுமதி சொந்தத்தில் தயாரித்த படங்களான லைலா மஜ்னு, காதல் ஆகியவை ஆகும். லைலா மஜ்னுவில் பானுமதி பாடிய 'பிரேமைதான் பொல்லாததா பிரேமைதான் பொல்லாததா' என்ற பாடல் பிரபலமானது. அதே படத்தில் அவர் பாடிய 'எனது உயிர் உருகும் நிலை சொல்வாய் நீ வான்மதி' என்று பாட்டும் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
பி. பானுமதி தொடர்ந்து பாடி பிரபலமான பாடல்கள் 'வெயிலுக்கேற்ற நிழல் உண்டு' 'கல்வனின் காதலி' 'அழகான பொண்ணுனா' 'மாசிலா மாசிலா உண்மை காதலே' என பல ஹிட்டான பாடல்களை அவர் பாடியுள்ளார். மலைக்கள்ளன் படத்தில் 'உன்னை அழைத்தது யாரோ நானே' 'இன்ப ரோஜா' ஆகிய பாடல்கள் ரசிக்கப்பட்டது.
பெரிய ஹீரோக்களுடன் நடித்த நடிகை பானுமதி
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அந்தக்கால பெரிய ஹீரோக்களுடனும், என்.டி. ராமாராவ், ஏ. நாகேஸ்வரராவ் போன்ற பெரிய தெலுங்கு ஹீரோக்களுடனும் இணைந்து நடித்தவர்.
எம்ஜிஆர், சிவாஜி கணேசனுடன் பானுமதி
எம்ஜிஆர் உடன் நாடோடி மன்னன், மதுரை வீரன், மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், சிவாஜி கணேசனுடன் தெனாலிராமன், அம்பிகாபதி, கல்வனின் காதலி, அறிவாளி, ரங்கோன் ராதா மற்றும் ஜெமினி கணேசனுடன் பெண்ணின் பெருமை, சதாரம் போன்ற படங்களிலும் நடித்தார்.
நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்த பானுமதி
1970 க்கு பிறகு பானுமதி பெரிய நாயகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார். அவரது சொந்த தயாரிப்பில் அவரே இயக்கி வெளிவந்தவை கடைசியாக அவர் இயக்கிய படம் தான் 'பெரியம்மா'. இந்த படத்தில் தஞ்சம் புகுந்த இளம் காதலர்களுக்கு இரட்சகராகவும், ஆதரவு தருபவராகவும் பெரியம்மாவில் நடித்தார். இந்த படம் வியாபாரரீதியாக எதிர்பார்த்த வெற்றி தரவில்லை என்றாலும், பானுமதியின் படைப்பு என்ற தனி முத்திரை அவற்றில் தெரிந்தது. அதேபோல தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த 'செம்பருத்தி' படம் தான் அவரது கடைசிப் படமாகும்.
அஷ்டபதானி என செல்லமாக அழைக்கப்பட்ட பி. பானுமதி
பி. பானுமதிக்கு கலை உலகில் அஷ்டபதானி என்று பெயர். சிறப்பாக கதைகளை எழுதக்கூடியவர் பிரபல பத்திரிகைகளில் அவரது கதைகள் வெளிவந்து உள்ளன. சினிமாவில் கதாசிரியர் , வசனகர்த்தா, இசையமைப்பாளர், பாடகி, இயக்குனர், எடிட்டர் , ஒளிப்பதிவு நிபுணர், ஸ்டுடியோ அதிபர் ஆகிய சகலத் துறைகளிலும் தனித்திறமை பெற்றிருந்ததால் அவரை அஷ்டாவதானி என்றும், சகலகலா வள்ளி என்றும் கதை உலகத்தினரும் திரை உலகத்தினரும் போற்றிப் புகழ்ந்தனர்.
நடிகை பி. பானுமதி வாங்கிய விருதுகள்
பி. பானுமதி அவர்களுக்கு 1966 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2003 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டது. அதேபோல தனது சினிமா பங்களிப்புக்காக பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
நடிகை பி. பானுமதி காலமானார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வர் ஆனதும் பானுமதியை தமிழக அரசின் இசைக்கல்லூரி முதல்வராக நியமித்தார். எல்லாத் துறைகளிலும் வல்லவராகவும், வல்லுனராகவும் திகழ்ந்த பானுமதி அவர்கள் சிறிது காலம் உடல்நிலம் இன்றி சிகிச்சை எடுத்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு 2005 டிசம்பர் 24 சனிக்கிழமை இரவு பானுமதி காலமானார்.
மேலும் படிக்க - 700 படங்களில் நடித்த பிரபல கதாநாயகி! மதுப்பழக்கத்தால் நிஜ வாழ்க்கையில் நடந்த சோகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ