இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது: தொல் திருமாவளவன்

"மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள் இது வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் தான் இருக்கும் தமிழ் மண்ணில் அவர்களின் ஜம்பம் பலிக்காது”: தொல் திருமாவளவன்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 17, 2022, 01:06 PM IST
  • சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்கிற கொள்கை முழக்கத்தோடு விடுதலைச் சிறுத்தைகள் இந்த சமூக நீதிக் களத்தில் போராடி வருகிறது: தொல் திருமாவளவன்
  • காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்: தொல் திருமாவளவன்
  • இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது: தொல் திருமாவளவன்.
இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது: தொல் திருமாவளவன் title=

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார்  சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் மாலை அணிவிக்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிலைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், 'சமூக நீதியின் வழியே ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் நிலை நாட்ட அனைத்து  ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தந்தை பெரியார் பிறந்த நாளில் அறைகூவல் விடுக்கிறது. சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்கிற கொள்கை முழக்கத்தோடு விடுதலைச் சிறுத்தைகள் இந்த சமூக நீதிக் களத்தில் போராடி வருகிறது. 

வருகிற செப்டம்பர் 28 மதுரையிலும் அக்டோபர் 8 கோவையிலும் காங்கிரஸ் திமுக இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்கிற கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதை ஒரு கருத்தியல் பரப்பு நடவடிக்கையாக முன்னெடுக்கிறோம். 

இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. பெரியார் அம்பேத்கர் என்கிற மாமனிதர்கள் கண்ட கனவை நினைவாக்குவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் முன்னழியக்கூடிய அனைத்து ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்பதற்கு சனாதன சக்திகளை தனிமைப்படுத்தி ஆக வேண்டும். 

காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதை பெரியார் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளான இன்று ஒரு அழைப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுக்கிறது. 

இன்னும் தமிழகத்தில், இந்தியாவில் சாதிய வன்கொடுமைகள் தலை விரித்து ஆடுகின்றன. பெரியார் அம்பேத்கர் என்கிற மாமனிதர்கள் இந்த மண்ணில் தோன்றி சமூக நீதி கருத்துக்களை பரப்பிய நிலையிலும் சாதியவாத சக்திகள் சனாதன சக்திகள் சாதி அடிப்படையில் கூர்மைப்படுத்துகிறார்கள், மோதலுக்கு வழிவகுகிறார்கள்.

தென்காசி அருகே சங்கரன்கோவில் பக்கத்தில் உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்க சென்ற போது அவர்களை இழிவு படுத்தும் வகையில் அவர்களின் உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் வகையில் காயப்படுத்தும் வகையில் உங்கள் ஊரைச் சார்ந்தவர்களுக்கு பொருள் எதுவும் தர மாட்டோம், கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று சொல்லுகிற வீடியோ காட்சி பரவி வருகிறது. காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது என்றாலும் கூட அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

மேல்ம் படிக்க | 'மதுரை வேட்பாளர் மோடி வெற்றி' - இணையத்தில் ஹிட் அடித்த பாஜகவினரின் பிறந்தநாள் போஸ்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த  ஒரு ஆண்டில் 8  தலித்துகள் பல்வேறு காரணங்களை சொல்லி கொடூரமாக சாதியின் பெயரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதிலே பெண்மணி சத்யா என்பவரும் கொல்லப்பட்டிருக்கிறார். அந்த பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அண்மையிலே ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். மீண்டும் தமிழக அரசுக்கு காவல்துறைக்கு வேண்டுகோள் விடுகிறோம் இதுபோன்ற வன்கொடுமைகள் பரவுகிற பகுதிகளை அடையாளம் கண்டு வன்கொடுமை பகுதியாக அறிவித்து தீண்டாமை போன்ற வன்கொடுமைகளை தடுப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடக்கு மலை கிராமத்தில் மக்கள் கோவிலில் நுழைவதற்கு உரிமை கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் கோவிலில் சென்று வழிபடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. அதற்காக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர் பாபு அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 

தமிழ்நாட்டை அவர்கள் குறி வைத்து இருக்கிறார்கள். குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துகிறார்கள். பெரியாருக்கு காவியை பூச முயற்சிக்கிறார்கள். அதேபோல இன்றைக்கு மோடியை பெரியார் என்று காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். இவையெல்லாம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகும் தான் இருக்குமே தவிர தமிழ் மண்ணில் அவர்களின் ஜம்பம் பலிக்காது. தமிழ் மண்ணில் இருந்து அவர்கள் விரட்டப்படுவார்கள்' என கூறினார்.

மேலும் படிக்க | நரேந்திர மோடியின் பிறந்தநாள் பேனர் மீது கொடி கட்டிய விசிக!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News