கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளன. கொரோனா பரவலை தடுப்பதற்கான நடிவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை (டிச. 24) முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய உள் வளாகத்திற்குள் வருபவர்களுக்கு 2 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லை என சான்று வைத்திருக்கவேண்டும். முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருந்து கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆராய்ந்தார். மேலும் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் கொரோனா அதிகரித்து கொண்டு இருக்கிற காரணத்தினால் அந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு பரிசோதனை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
குறிப்பாக ஜப்பான், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களை ரேண்டமாக 2 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளோடு வந்தால் அவர்களை பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. கோவை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் நாளை முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும். 6 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. படுக்கைகளை பொருத்தவரை கொரோனாவிற்கு என்று ஏற்கனவே ஏற்பாடு செய்த படுக்கைகள் அனைத்தும் கையிருப்பில் இருக்கிறது.
அதோடு மட்டுமல்லாது, கடந்த அலையின்போது தமிழக முதல்-அமைச்சர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளை கூடுதலாக, தமிழகத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள், தமிழ்நாடு முழுவதிலும் திறந்து வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு என்றும் கூட பிரத்யேகமாக படுக்கைகள் உள்ளது.
மருந்து நிறுவனங்கள் தயாரிப்பை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. அதோடு மட்டுமில்லாமல், ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பாக, ஜெனரேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருக்கிறது. எனவே மக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை. தடுப்பூசி போடும் பணி முதல் தவணை 96 சதவீதம், 2-வது தவணை 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மக்களுக்கு 90 சதவீதத்துக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களாக பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 6 மாத காலமாக கொரோனா இறப்பு ஏதும் இல்லாத நிலை என்பது தொடர்ச்சியாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. எனவே மிக பாதுகாப்பான நிலையில் தமிழகம் உள்ளது. மேலும், மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் பாதுகாப்புக்காக முக கவசங்கள் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மாதிரியான விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ