நிலவை சுற்றிவரும் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் ‘விக்ரம்’ ஆர்பிட்டரிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது!
ஜூலை மாதம் 22 ஆம் தேதி அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம் நிலவை நெருங்கி விட்ட நிலையில், தற்போது அதன் சுற்றுவட்டப்பாதை 5வது மற்றும் கடைசி முறையாக நேற்று மாலை 6.21 மணியளவில் மாற்றியமைக்கப்பட்டது.
சந்திராயன் 2-ல் உள்ள விக்ரம் என்ற விண்கலம் இன்று பிற்பகல் தனியாகப் பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து விக்ரம் விண்கலத்தின் உயரம் முதலாவது வட்டப்பாதையில் நாளை காலை நிலவின் உயரத்தில் 120 கிலோ மீட்டர்களில் இருந்து 109 கிலோ மீட்டர்களாக குறைக்கப்படுகிறது.
தொடர்ந்து 4 ஆம் தேதி அதிகாலை 2-வது சுற்றுவட்டப் பாதையில் விக்ரம் விண்கலத்தின் உயரம் நிலவின் உயரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர்களாகக் குறைக்கப்படுகிறது. தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி வரை குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் விக்ரம் விண்கலம் வரும் 7 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, விக்ரம் கலம் தரையிறங்கிய பின்னர், நான்கு மணி நேரம் கழித்து, அதிலிருந்து பிரக்யான் கலம் பிரிந்து நிலாவின் தரையில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் இன்று நிலா அருகில் சென்றுள்ளது. தற்போது சந்திரயான்-2 விண்கலம், நிலவின் பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 127 கி.மீ. தொலைவிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டரை பிரிக்கும் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) மதியம் நடந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தரைதளத்தில் இருந்து கொண்டே சந்திரயானில் இருந்து லேண்டரை பிரித்தனர். மதியம் 12.45 மணி முதல் 1.45 மணி வரை இந்த பணி நடந்தது.
#ISRO
Vikram Lander Successfully separates from #Chandrayaan2 Orbiter today (September 02, 2019) at 1315 hrs IST.For details please visit https://t.co/mSgp79R8YP pic.twitter.com/jP7kIwuZxH
— ISRO (@isro) September 2, 2019
லேண்டரை பிரிக்கும் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தற்போது லேண்டர் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அது மிகவும் நல்ல நிலையில் உள்ளதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக நாளையும், நாளை மறு நாளும் சந்திரயான்-2 விண்கலத்தின் நீள்வட்ட சுற்றுப்பாதையை மேலும் குறைக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரையும் நாளை மறுநாள் மாலை 3 மணி முதல் 4 மணி வரையும் இந்த பணி நடைபெறும். இதன் மூலம் குறைந்தபட்சம் 36 கி.மீ. தொலைவு கொண்ட நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான்-2 வந்து விடும்.
36 கி.மீ. தூரத்தில் இருந்தபடி நிலவில் லேண்டரை தரை இறக்க அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் வெற்றிகரகமாக செய்து முடிக்கப்படும்.