காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பகலில் அடித்த வெப்பத்தின் காரணமாக, இரவில் வீசும் அனல்காற்றால், இரவு தூங்க முடியாத நிலை இருந்து வந்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது:
லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.