ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் கைது!

Last Updated : Jan 31, 2017, 10:09 AM IST
ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர்  ஹபீஸ் சயீத் கைது! title=

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது, லாகூரில் நேற்று (திங்கள்கிழமை) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்பேரில், செளபுர்ஜி மசூதியில் இருந்த ஹபீஸ் சயீதை லாகூர் போலீஸார் திங்கள்கிழமை மாலை சுற்றி வளைத்தனர்.

ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும், ஹபீஸ் சயீதுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் மீது தடை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

அதையடுத்து, ஹபீஸ் சயீதுக்கு எதிராக, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஜமாத்-உத்-தாவா அமைப்புக்குத் தொடர்பு உள்ளது. இந்த அமைப்பை, சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா, கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தது.

ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் முக்கிய மூளையாக செயல்பட்டவர். அவர் தற்போது பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் உள்ளார்.

அமெரிக்க அரசின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெனால்டு டிரம்ப் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஜமாத் அத் தாவா அமைப்பு மீதும், அதன் தலைவர் ஹபீஸ் சையத் மீதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் பஞ்சாப் மாகாண உள்துறை நேற்று ஹபீஸ் சையத்தை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஹபீஸ், லாகூரில் உள்ள வீட்டை விட்டு வெளியே வராதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

Trending News