NEET 2020 தேர்வில் முதலிடம் பெற்ற ஷோயெப் அப்தாப் (Shoyeb Aftab) பெரிய அளவிலான சாதனையைப் படைத்துள்ளார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட NEET 2020 முடிவுகள் மற்றும் தகுதி பட்டியலில், ஷோயெப் அப்தாப் 720 / 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். NEET தேர்வு வரலாற்றில் முழு மதிப்பெண் பெற்ற முதல் மாணவர் என்ற பெருமையையும் இதன் மூலம் அவர் அடைந்தார்.
ஷோயெப் 100 சதவீத மதிப்பெண் என்ற சாதனையை மட்டும் செய்யவில்லை. அகில இந்திய அளவில், ஒடிசாவிலிருந்து (Odisha) நீட் தேர்வில் முதலிடம் பெற்ற முதல் மாணவரும் அவர்தான். அந்தப் பெருமையையும் அவர் எட்டியுள்ளார்.
ஒரு மாணவராக, தான் நன்றாகப் படித்ததாகவும், ஆனால், மிகவும் நன்றாக படித்ததாக கூற முடியாது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
அவர் 8 ஆம் வகுப்பில் இருந்தபோது, அப்போது தேயிலை வியாபாரியாக இருந்த அவரது தந்தை பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அதன் காரணமாக அவரது தந்தை தனது தொழிலை மாற்றிக்கொண்டார். ஆனால் தனது குடும்பத்தினரால் தன்னை கோட்டாவில் (Kota), பயிற்சி வகுப்புகளில் சேர்த்து படிக்க வைக்க முடியுமா என்பது அப்போது ஷோயெபுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால், அவரது தந்தையின் கட்டுமானத் தொழில் சற்று முன்னேறியதால், கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் அவர் சேர்ந்தார். அவரது படிப்பு தடையில்லாமல் நடக்க, அவரது தாயும் சகோதரியும் ஒடிசாவிலிருந்து கோட்டாவுக்கு வந்து அவருடன் வசிக்கத் துவங்கினார்கள்.
ஆனால் துவக்கத்தில் அவர் பல கஷ்டங்களை அனுபவித்தார். 11 ஆம் வகுப்பில் அவருக்கு மிக நல்ல மதிப்பெண்கள் வரவில்லை. அவரால் பல மணிநேரங்கள் படிப்பில் கவனமும் செலுத்த முடியவில்லை.
இதனால் துவண்டு போகாத ஷோயெப் படிப்பில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். கடின உழைப்பாளியானார். இதன் விளைவாக, அவரது மதிப்பெண்களில் நல்ல முன்னேற்றம் வரத் தொடங்கியது. அவருக்கு உதவித் தொகைகளும் கிடைக்கத் தொடங்கின.
பள்ளிப் படிப்பு மற்றும் கூடுதல் பயிற்சி மையங்களில் படிப்பு என இவை அனைத்தையும் சமாளிப்பது பெரிய விஷயமாக இருந்தது. இதற்கு விடா முயற்சி தேவைப்பட்டது. ஷோயெப்பும் தளராமல் உழைத்தார்.
ALSO READ: NEET Result 2020: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை
தினமும் ஷோயெப் பள்ளியிலிருந்து நேரடியாக பயிற்சி மையத்திற்குச் செல்வார். அவர் காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி இரவு 7 மணிக்கு வீடு திரும்புவார். அதன் பிறகு 2-3 மணி நேரங்களுக்கு படிப்புக்காக தினமும் ஒதுக்கினார்.
"தினமும் 3 மணி நேரம் மட்டும் படித்தது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இன்னும் அதிக நேரம் படிப்புக்கு ஒதுக்க விரும்பினேன். விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் படிக்கத் துவங்கினேன். அப்படிப்பட்ட நாட்களில் நான் எந்த வித ஓய்வுமின்றி 13 - 14 மணிநேரங்கள் படித்தேன். எனது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு நான் ஜனவரி மாதத்தில் தான் படிக்க ஆரம்பித்தேன்.” என்கிறார் ஷோயெப். அவர் CBSE பொதுத் தேர்வில் 96 % மதிப்பெண் பெற்றார்.
தனது NEET முடிவுகளால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னுடைய வெற்றிகளுக்கெல்லாம் தன்னுடன் எப்போதும் துணை நின்று அன்போடு ஆதரித்த தனது தாய்தான் காரணம் என்றும் அவர் கூறினார். தில்லியில் உள்ள AIIMS மருத்துவமனையில் அவர் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR