அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டுவரும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், ஆளுநர் துணைவேந்தர் அதிகாரத்துக்குள் தலையிடுவது தமிழகத்தில் குடியரசு ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்லூரி மாணவிகளை மோசமான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற பேராசிரியர் நிர்மலாதேவியின் உரையாடல், பெற்றோர்கள் அனைவரையும் குலை நடுங்க வைத்திருக்கிறது.
இந்நிலையில், நிர்மலாதேவியின் தொலைபேசி உரையாடல் குறித்து மாநில ஆளுநர், துணை வேந்தரின் அதிகாரத்தையும் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்டு பேட்டியளிப்பது ஆரோக்கியமான நடைமுறையாகாது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் முதல்வர் எப்போதும்போல் பதில் அளிக்காமல் இருக்க, மாநில ஆளுநர் துணை வேந்தரின் அதிகாரத்துக்குள் பிரவேசித்து விசாரணை அதிகாரியை நியமித்திருப்பது, தமிழ்நாட்டில் குடியரசு ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை எல்லோருடைய மனதிலும் ஏற்படுத்துகிறது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன் என்று உறுதியளித்து பதவியேற்ற ஆளுநர், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியிருப்பது மாநிலத்தில் உள்ள ஆட்சி ஆளுநரின் பார்வையில் சஸ்பெண்ட் அனிமேஷனில் வைக்கப்பட்டுள்ளதாகவே உணரப்படுகிறது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.