அகஸ்டா வெஸ்ட்லேண்டு ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் 7 நாட்கள் அமலாக்க துறை காவலுக்கு அனுப்பப்பட்டார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், குடியரசுத் தலைவர் பிரதமர் போன்றோருக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் இடைத் தரகராக செயல்பட்டவர் பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டின் மைக்கேல். அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து சுமார் 225 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக மைக்கேல் மீது CBI, அமலாக்கத்துறை போன்றவை குற்றம் சாட்டியுள்ளன. அந்தத் தொகை அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கில், இந்தியப் புலனாய்வு நிறுவனங்களால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில் துபாயில் கைது செய்யப்பட்ட மைக்கேலை விசாரணைக்காக அனுப்பி வைக்கும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று, அவரை அனுப்பிவைக்க துபாய் நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதையடுத்து, இந்தியா அழைத்துவரப்பட்ட கிறிஸ்டின் மைக்கேல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணை நடை பெற்றுகொண்டிருக்கும் நிலையில், அவரது சிபிஐ காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். தனது ஜாமீன் மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், தமக்கு திகார் சிறையில் தனி அறை வேண்டுமென கிறிஸ்டியன் கோரியிருந்தார்.
இந்த நிலையில், கிறிஸ்டியனிடம் தங்கள் தரப்பில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டுமென அமலாக்கத் துறையின் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை சோனியாவைத் தேசியத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி மன்மோகன் சிங்கை பிரதமராகக் கொண்டு நடைபெற்றது.
அவரது தலைமையிலான ஆட்சிக் காலத்தின்போது ஆட்சியில் பங்கேற்றுள்ள அதி முக்கியஸ்தர்கள் பயணம் செய்வதற்கென பல நவீன வசதிகள் கொண்ட விலையுயர்ந்த ஹெலிகாப்டர் வாங்குவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் முறைகேடுகள் நடைபெற்றதாகத் தெரிய வந்ததையடுத்து, தற்போதைய மத்திய அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது ஊழல் நடைபெற்றிருப்பது தெரிய வந்ததையடுத்து குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது வாங்குவதென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டருக்கு "பறக்கும் சவப்பெட்டி" என சர்வதேச அளவில் பெயரிடப்பட்டிருந்தது. இதை வாங்கி அதில் பயணம் செய்த பல முக்கியஸ்தர்கள், ஆகாயத்திலேயே ஹெலிகாப்டர் வெடித்து இறந்துள்ள காரணத்தினாலேயே பறக்கும் சவப்பெட்டி என்ற பட்டப் பெயர் இந்த ஹெலிகாப்டருக்கு சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.