டெல்லி ஆளும் ஆம் ஆத்மி கட்சி கேலிக்குரிய கட்சியாக மாறிவிட்டது என பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்!
புது டெல்லி மாநில பாஜக செயற்குழு கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவிக்கையில்., "டெல்லியில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி உண்மையில் என்ன செய்தார்கள்? என்பதை மக்கள் இப்போது உணரத் தொடங்கி விட்டனர்.
அவர்கள் (ஆம் ஆத்மி கட்சி) நகைப்புக்கு உரியவர்களாக மாறிவிட்டனர். நாட்டின் தலைநகரான டெல்லி மீது தீவிர பார்வை கொண்ட தலைமைதான் தேவை. அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதன் அறிகுறி தான் நடந்த முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள்" என தெரிவித்தார்.
தனது 30 நிமிட உரையில் ஜே.பி. நட்டா மோடி அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டதுடன், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றிக்கு பாடுபட்ட மாநில பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.