ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு அளிக்கப்பட்டு வந்த Z பிரிவு பாதுகாப்பினை திரும்ப பெருவதாக ஆந்திரா அரசு அறிவித்துள்ளது!
இந்தியாவின் முக்கிய நபர் ஒருவருக்கு ஏற்படும் அச்சுறுத்தல் உணர்வைப் பொறுத்து, அவருக்கு நான்கு வகை பாதுகாப்பு அடுக்குகள் இந்தியாவில் அளிக்கப்படுகிறது. அவை Z + (மிக உயர்ந்த நிலை), Z, Y மற்றும் X ஆகியன ஆகும்.
இந்த பாதுகாப்பு போர்வையின் கீழ் தனிநபர்கள் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்திய ஆயுதப்படைகளின் சேவைத் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு இதுநாள் வரையில் Z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்த பாதுகாப்பு நிலையின் படி 4 அல்லது 5 NSG கமாண்டோ உள்ளடக்கிய 22 காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்படும். இந்நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் பதவியில் இருந்து நாயுடு விலகியதை அடுத்து அவருக்கு இதுநாள் வரை அளிக்கப்பட்டு வந்த Z பிரிவு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாக ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.
அதேவேளையில் அவரது குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பும் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மகனும், முன்னாள் அமைச்சருமான நாரா லோகேஷ் அவர்களுக்கு தற்போது 2+2 பாதுகாவலர்கள் அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிருஷ்ணா நதி கரையில் கட்டிய அரசு கட்டிடம் இடிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். முதல்வரின் இந்து உத்தரவிற்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது முன்னாள் முதல்வருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ள விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.