ரபேல் விவகாரத்தில் டசால்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராபியர் கூறிய அறிக்கை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முகத்தில் அறைந்தது போல உள்ளது என டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது ரபேல் ஒப்பந்தம் குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து பேட்டியளித்த டசால்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராபியர் கூறியதாவது, ரபேல் போர் விமானங்களை இந்தியாவிற்கு சப்ளை செய்யும் விஷயத்தில் நான் பொய் கூறவில்லை. இந்த விஷயத்தில் நான் கூறியதும், வெளியிட்ட அறிக்கைகளும் முற்றிலும் உண்மையானது.
சால்ட் நிறுவனத்தின் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது எங்கள் நிறுவனத்தின் முடிவு தான். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மேலும் 30 நிறுவனங்கள் எங்கள் பங்குதாரராக உள்ளன. முதலில் போட்ட ஒப்பந்தத்தின்படி, பறக்கும் நிலையில் 18 விமானங்களை அளிக்க வேண்டும். இரண்டாவது ஒப்பந்தத்தின்படி, 36 விமானங்களை சப்ளை செய்ய வேண்டும். ஆனால், 36 விமானங்களின் விலையும், 18 விமானங்களின் விலையும் ஒன்று தான். விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, விலையும் அதிகரிக்கும் என கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் ரபேல் விமானம் குறித்து கூறிய புகார்களை நிராகரித்துள்ளார்.
இந்நிலையில், இதுக்குறித்து கருத்து தெரிவித்த டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, "காங்கிரஸின் தலைவர் மீண்டும் மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி அதை உண்மையாக்க பார்க்கிறார். ஆனால் தற்போது ரபேல் விவகாரத்தில் டசால்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராபியர் கூறிய அறிக்கை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முகத்தில் அறைந்தது போல உள்ளது" எனக் கூறினார். மேலும் பா.ஜனதா என்ற ஒரு கட்சி மட்டுமே வளர்ச்சிக்காக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.